தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகே குன்னம் எனும் இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பொறியியற் கல்லூரியின் உள் விளையாட்டரங்க கட்டடம் இடிந்து விழுந்ததில் திங்களன்று மாலை 9 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவருமே ஒதிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
கட்டுமானப் பணியில் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்ததாகவும் மாலை சுமார் 5 மணியளவில், 40 அடி உயர சுவர், இடிந்து விழுந்ததில், கீழே வேலை செய்துகொண்டிருந்த ஆறு பேர் நசுங்கி உடனேயே இறந்துபோனதாகவும் கூறப்படுகிறது.
காயமுற்றவர் மூவர் காஞ்சிபுரம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தனர்.
காயமடைந்த வேறு மூவர் சென்னை பொது மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர்.
மீட்பு பணிகள் நடைபெற்றுவருவதாகவும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் வழக்கொன்றும் பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக் காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப்பணிகளில் பீஹார் மற்றும் ஒதிஷா மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள், அந்நிலையில் அவர்களது வாழ்நிலை மற்றும் பணியிடப் பாதுகாப்பின் மீது மாநில நிர்வாகம் போதிய அக்கறை காட்டுவதில்லை என ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டிவருவது இங்கே குறிப்பிடத்தக்கது.