டெசோ மாநாடு: விருப்பமில்லாமல் திமுக நிர்வாகிகள் – கடுப்பாகிப் போன கருணாநிதி!

சென்னை: தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தாலும் எப்போது தமிழீழத் தீர்வை வலியுறுத்தமாட்டோம் என்று அவர் அறிவித்தாரோ அப்போதே திமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதான் டெசோ மாநாட்டுப் பணிகளிலும் தொய்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டெசோ மாநாடு வரும் 12-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. டெசோ தொடர்பான பணிகளை செய்து முடிக்க மாநில நிர்வாகி ஒருவரிடம் கருணாநிதி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். ஆனால் அந்த நிர்வாகியோ, தமிழீழமே தீர்வு இல்லை என்று சொல்கிற தமிழீழ ஆதரவாளர் மாநாட்டுக்கு என்னத்த செய்றது? இந்த கட்சியில்தான் இருக்கனுமா? பேசாம ஊரு பக்கம் போய்விடலாமா? என்ற ரீதியில் குமுற இதே பாணியில் தொலைக்காட்சியில் எட்டிப் பார்க்கும் மற்றொரு மாநில நிர்வாகியும் புலம்பிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

இந்த புலம்பல்களுக்கு இடையே கருணாநிதி கொடுத்த பொறுப்பான சில காரியங்கள் சில அடிகள் நகர்ந்த நிலையில் அப்படியே தொய்வடைந்து போனது. யதேச்சையாக அறிவாலயத்தில் கூப்பிட்டு என்னய்யா எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க… அந்த நிர்வாகியோ பட்டும் படாமல் பதில் சொல்ல கருணாநிதி இதை எதிர்பார்க்கவில்லை… செம கடுப்படைந்தவராக நீ ஒன்னும் அந்த வேலையை செய்ய வேண்டாம்.. நானே பார்க்கிறேன் என்று டோஸ் விட்டிருக்கிறார். பதறிப் போன நிர்வாகியோ, அய்யா.. நானே செய்து முடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் கருணாநிதியின் மனம் ஒப்பவில்லை. இன்னும் என்ன என்ன சொதப்பல் வைத்திருக்கிறார்களோ என்று எண்ணியவாறுதான் இன்று காலை அவரே நேரே மாநாட்டு பந்தலுக்குப் போய் பார்த்துவிட்டு சில ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார். விரக்தி அடைந்த மனிதராக…

TAGS: