அசாமில் வன்முறைக்கு இதுவரை 73 பேர் பலி

கவுகாத்தி: அசாமில் மீண்டும் துவங்கியுள்ள வன்முறைக்கு மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், வன்முறைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை, 73 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், கோக்ராஜ்கர் மற்றும் தூப்ரி மாவட்ட எல்லைப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை எண் 31ல், நேற்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அசாமின், கோக்ராஜ்கர் மற்றும் சிராங் மாவட்டங்களில், போடோ பழங்குடியினருக்கும், வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த சிறுபான்மையினருக்கும் இடையே, சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 56 பேர் உயிரிழந்தனர்.

ஏராளமான வீடுகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகளை இழந்த மூன்று லட்சம் பேர், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

மாநில மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, 10 நாட்களாக இயல்பு நிலை திரும்பியிருந்தது. கடந்த ஞாயிறன்று மீண்டும் கலவரம் வெடித்தது. அதில், சிராங் மற்றும் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் ஐந்து பேர் பலியாயினர்.

TAGS: