இலங்கைத் தமிழருக்கு சம உரிமை: ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

“நம் உறவுகளாகிய, இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி அவர்களின் துயரை நீக்க வேண்டும் என மத்திய அரசை இந்தத் தருணத்தில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ , என்று முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சென்னையில் திமுக சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர் மாநாடு நடத்தப்பட்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவும் சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

கடந்த 15 மாதங்களாக தனது அரசு பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளதாகக் குறிப்பிட்ட முதல்வர் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்கப்படும் மொத்த வளர்ச்சியைக் காட்டிலும் தமிழகம் 20 சதம் கூடுதல் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழ்நாட்டின் தற்போதைய முக்கியப் பிரச்சனையா மின் தட்டுப்பாடு குறித்து அவர் குறிப்பிடும்போது, தமிழகத்தில் மின் உற்பத்திக்கான பல்வேறு திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு, மின் தட்டுப்பாடு முழுதும் நீங்கும் வகையிலான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

-BBC

TAGS: