இந்தியா எங்கள் எதிரியல்ல: சீனா அறிவிப்பு

சீனாவின் வெளியுறவு துணை மந்திரி ப்யூ-இங், நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சீனா திரும்பிய  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவும் சீனாவும் நட்புறவு நாடுகளே தவிர எதிரி நாடுகள் அல்ல. கடந்த காலங்களில் இருநாட்டு தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் வலுவான முன்னேற்றத்தை நாங்கள் கண்டுள்ளோம்.

தெற்கு ஆசிய நாடுகள் குறித்த சீனாவின் கொள்கைகள் இந்தியாவின் நேச நாடுகளான நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட அனைத்து சார்க் நாடுகளின் நலனை பாதிக்காவண்ணம் இருந்து வருகின்றன. இது இந்த ஆசியப் பகுதியில் பொதுவான வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

தென் ஆசியப்பகுதியில், வலுவான முன்னேற்றத்தை காணும் நோக்கில் சீனா, இந்தியாவுடன் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அனைத்து சார்க் நாடுகளுடனும் இணைந்து செயல்பட சீனா  தனது முழுமையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தென் கிழக்கு ஆசியப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்களின் வலிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் சீன மந்திரியின் இந்த பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சார்க் நாடுகளிடையே வெளிப்படையான ஒத்துழைப்பு பற்றி சீனா பேசுவதும் இதுவே முதல் முறையாகும்.

TAGS: