விடுதலைப் புலிகள் மீதான தடை – தீர்ப்பாயத்தில் வாதிட வைகோவுக்கு அனுமதி

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த வாதங்களை முன்வைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ர நீதிபதி வி.கே.ஜெயின் அனுமதித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது பற்றிய தீர்ப்பாயத்தின் அறிவிப்பை கடந்த 18-ந் தேதி வெளியிட்டது. தீர்ப்பாயத்தின் விசாரணையில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தம்மையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்கக் கோரினார்.

இது தொடர்பான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் சாண்டியோக் தமது வாதத்தை எடுத்துவைத்தார்.

வைகோ, தனது தரப்பு வாதத்தை கூறுகையில்;  “விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அனுதாபிகளைச் சுட்டிக் காட்டித்தான் இந்த தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நான், விடுதலைப்புலிகளின் ஆதரவாளன், அனுதாபி ஆவேன். கடந்த தீர்ப்பாயத்திலேயே, எங்கள் இயக்கமான ம.தி.மு.க.வை, மத்திய அரசு, தன்னுடைய ஆவணங்களில் குறிப்பிட்டு உள்ளது. புலிகளை ஆதரித்தேன் என்பதற்காக என் மீது வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளது. எனவே, சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவும், இந்த விசாரணையில் நான் பங்கேற்கவும் அனுமதிக்க வேண்டும்” என்றார்.

ஆனால் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது; அதே நேரத்தில் தீர்ப்பாய விசாரணையிலும், புலிகள் மீதான தடை குறித்து, வைகோ தன் வாதங்களை முன்வைக்கலாம் என்று நீதிபதி வி.கே.ஜெயின் ஆணை பிறப்பித்தார்.

தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு, சென்னையில் அடுத்த மாதம் 28, 29-ந் தேதி ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும்.

TAGS: