தமிழ் திரையுலகில் மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்படும் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் பத்ம விருதுகள் வழங்க வேண்டும் என்று தான் அளித்த பரிந்துரையை இந்திய மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு அவர்களது பெயர்களை இந்திய மத்திய அரசுக்கு பரிந்துரைத்ததாகவும், ஆனால், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஜெயா டி.வி.யின் 14-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமூர்த்தி ஆகியோருக்கான பாராட்டு விழாவில் பேசும்போது முதல்வர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
“நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது அவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன்” என்று ஜெயலலிதா தெரிவித்தார்.