கஸாப்பை தூக்கிலிடப் போவது யார்?

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் பிரஜை முகமது அஜ்மல் அமீர் கஸாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள போதிலும், அவரைத் தூக்கிலிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யவும், அதன்பிறகு இந்திய குடியரசுத் தலைவரிடம் மனுத்தாக்கல் செய்யவும் வாய்ப்பு இருக்கும் நிலையில், அந்த வழிகள் அனைத்திலும் அவர் தோல்வியடைந்தாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதே கேள்வி. காரணம், தூக்கில் போடுவதற்கு, இந்தியச் சிறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் யாரும் இல்லை.

கடைசியாக, இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004-ம் ஆண்டில். மேற்கு வங்க மாநிலத்தில், கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தனஞ்செய் சாட்டர்ஜிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியவர் நாடா மாலிக். அந்த தண்டனையை நிறைவேற்றிய சில காலத்துக்குப் பிறகு அவரும் காலமாகிவிட்டார்.

அதன்பிறகு, பஞ்சாபில் ஒரு தூக்கு தண்டனையை நிறைவேற்ற யாரும் இல்லை. தண்டனை பெற்ற பல்வந்த் சிங் ரஜோவனா விவகாரம் அதன்பிறகு அரசியல் பிரச்சினையாக மாறியதால் தண்டனை தள்ளிப்போனது வேறு விடயம். ஆனால், இப்போது பயிற்சி பெற்ற தூக்கிலிடும் நபர் இல்லாத நிலையில், யார் அதைச் செய்ய முடியும்?

இதுதொடர்பாக, மகாராஷ்டிர மாநில சிறைத்துறைத் தலைவர் பிபிசியிடம் பேசும்போது, மூத்த சிறை அதிகாரிகளில் ஒருவர் பயிற்சி பெற்று, அந்தப் பணியை நிறைவேற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

கடைசியாக தூக்கிலிடும் பணியில் இருந்த நாடா மாலிக்கின் மகன், மகாதேவ் மாலிக் தற்போது மேற்கு வங்க சிறையில் வேறு பணியில் இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு அஜ்மல் கஸாப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த போதே, அந்தத் தண்டனையை நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாக மகாதேவ் மாலிக் தெரிவித்தார்.

தனது தந்தை நாடா மாலிக், 25 தூக்கு தண்டனைகளை நிறைவேற்றியவர் என்றும், தனது தாத்தா 600 தூக்கு தண்டனைகளை நிறைவேற்றியவர் என்றும் அதனால் தூக்கிலிடும் அனுபவம் வாய்ந்த பரம்பரை தங்கள் பரம்பரை என்றும் மகாதேவ் மாலிக் கூறுகிறார். ஆனால், அவர் அதற்கான பயிற்சியை இதுவரை பெறவில்லை.

அதிகாரிகள், அவருக்குப் பயிற்சி கொடுப்பார்களா அல்லது வேறு யாரையாவது தயார் செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TAGS: