தமிழகம் வந்த இலங்கை சிங்கள விளையாட்டு வீரர்களை தமிழக அரசு திருப்பியனுப்பியது, இலங்கை சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடந்தியது போன்ற சம்பவங்களுக்கு திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி தமது கண்டத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி தெரிவித்துள்ளதாவது:
இலங்கை தமிழர்களிடம் மிகுந்த அக்கறையோடு இருப்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழகம் வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், சுற்றுலாவாகவும், கோவில்களுக்கும் வந்த இலங்கைப் பயணிகள் மீது, தாக்குதல் நடந்துள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சகம் விடுத்த வேண்டுகோளில், “இலங்கை மக்கள், தமிழகத்திற்கு சுற்றுலாவாகவும் மத ரீதியாகவும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காகவும், தொழில் ரீதியான பயிற்சிக்காகவும் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளனர்.
திடீரென, விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், தமிழகத்திற்கு வரும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவதும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை கெடுக்கக் கூடியது.
தமிழக மக்கள், எந்த வகையிலான எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் தூண்டுதல்களுக்கும் இடம் கொடுத்து விடாமல் அமைதி காத்து அரவணைப்போடு நடந்து கொள்ள வேண்டும். வாழை இலை, முள் மீது பட்டாலும் அல்லது முள் வாழை இலையில் பட்டாலும், சேதம் வாழை இலைக்குத் தான் என்பதை, மறக்கக் கூடாது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

























