புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் பத்திரிகை பிரதமர் மன்மோகன் சிங்கை திறமை இல்லாதவர் என விமர்சனம் செய்து இருந்தது. இந்த நிலையில் அந்நாட்டின் மற்றொரு பத்திரிகையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ அவரை ஊழல் மலிந்த அரசை வழி நடத்துபவர் என கடுமையாக தாக்கியுள்ளது.
வரலாற்று நிபுணரும், காந்திக்கு பிறகு இந்தியா (இண்டியா ஆப்டர் காந்தி) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ராமசந்திர குகா என்பவர் எழுதிய ஒரு கட்டுரை தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
79 வயது நிரம்பிய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கூச்ச சுபாவம் மிகுந்த மிகவும் மென்மையாக பேசக் கூடியவர். இந்திய பிரதமர்களிலேயே தோல்வியின் அபாய விளிம்பில் நிற்பவர். இந்திய வரலாற்றில் துயரமான மனிதர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
தனது அச்சத்தின் காரணமாக மனநிலை பாதிப்புக்கு ஆளானவராகவும், திருப்தியற்றவராகவும், புரிந்து கொள்ளும் திறன் அற்றவராகவும் உள்ளார். ஊழல் மலிந்த அரசை வழிநடத்தி செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் ‘தி இண்டி பென்டென்டை’ என்ற பத்திரிகையும் ‘டைம்’ பத்திரிகை போன்று மன்மோகன் சிங்கை திறமையற்றவர் என விமர்சனம் செய்துள்ளது.
இதேவேளை, இந்திய பிரதமரை விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய பிரதமர் பணிமனை கூறியிருந்தது. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கை நிர்வாகம் மறுத்துவிட்டது.