தேச துரோகக் குற்றச்சாட்டின் பேரில் ஓவியருக்கு சிறை

இந்தியாவில் கார்டூன் ஓவியர் ஒருவருக்கு தேச துரோககக் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றம் ஒன்று பதினான்கு நாட்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அஸீம் திரிவேதி என்ற இந்த ஓவியர் வரைந்த ஊழல் ஒழிப்பு சம்பந்தமாக வரைந்த கார்டூன்கள் பிரசுரமாகியதை சென்ற வாரக் கடைசியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜரான அஸீம் திரிவேதி பிணை கோர மறுத்திருந்தார். உண்மையைச் சொல்வதற்கு துரோகிப் பட்டம் கிடைக்கும் என்றால் தேச துரோகி என்று தான் முத்திரை குத்தப்பட்டாலும் மகிழ்ச்சிதான் என்று அவர் கூறினார்.

இந்திய அரசியல்வாதிகளை வெளிப்படையாக விமர்சித்து கேலிசெய்யும் கார்டூன்கள் சிலவற்றை வரைந்ததற்காக கடந்த சனிக்கிழமை திரிவேதி கைதுசெய்யப்பட்டார்.

இதிலே ஒரு படத்தில் இந்திய நாடாளுமன்றம் ராட்சத கழிப்பறைக் குழியாக காட்டப்பட்டிருந்தது. மற்றவற்றில் இந்தியாவின் தேசிய சின்னம் கேலிக்குள்ளாகும் விதமாக மாற்றி வரையப்பட்டிருந்தன. இந்திய அரசியல் சாசனத்தைக் இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேச துரோகம் தொடர்பான சட்டப் பிரிவின் கீழ் திரிவேதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்து சுதந்திரத்தை தாங்கள் ஒடுக்கவில்லை என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கருத்து சுதந்திரம் என்பதற்கும் நாட்டின் தேசிய சின்னங்களை இழிவுபடுத்துவதென்பதற்கும் இடைவெளி மிகவும் குறைவுதான் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனாலும் ஓவியர் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு சிவில் உரிமை குழுக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜனநாயக நாட்டில் இப்படியான ஒரு கைது நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனக்கூறி மற்ற தரப்பினரும்கூட இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஊழலில் உழலும் அரசியல் வாதிகள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வெளியில் சுற்றிக்கொண்டிருக்க, ஊழலுக்கு எதிராக குரல்கொடுக்கும் ஒருவரைப் போய் சிறையில் அடைப்பது அவமானகர செயல் என சமூக வலைத்தளங்களில் உணர்வலைகள் வெளிப்பட்டுள்ளன.

TAGS: