சாலைகள் அடைப்பு, போக்குவரத்து துண்டிப்பு: தனித் தீவான இடிந்தகரை!

நெல்லை: கூடங்குளம் கலவரத்தை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இடிந்தகரை தனித் தீவானது.

கூடங்குளத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்த தகவல் பரவியதும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் கடும் பதற்றம் நிலவியது. அங்கிருந்து விரைந்து வந்த ஆண்கள் சாலைகள் முழுவதும் கற்களை போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.

இடிந்தகரையில் இருந்து வைரவிகிணறு செல்லும் சாலையில் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டது. இதேபோல் இடிந்தகரைக்குள் செல்லும் நுழைவு வாயில் அருகே உள்ள சாலையின் இருபுறமும் கடப்பாறையால் தோண்டி சிதைக்கப்பட்டது. மேலும் முற்களை போட்டும் சாலைகளை அடைத்து வைத்துள்ளனர். பல இடங்களில் கற்களை போட்டு தடை செய்துள்ளதால் யாரும் இடிந்தகரைக்குள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் வாகன போக்குவரத்து இன்றி இடிந்தகரை கிராமம் முற்றிலும் தனித் தீவாக துண்டிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகம், அதன் அருகே உள்ள விஏஓ அலுவலங்களை சூறையாடிய போராட்டக்குழுவினர் அவைகளுக்கு தீ வைத்தனர். போராட்டக்குழுவினரை விரட்டியடிக்க போலீசாரும் தொடர்ந்து கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியவாறு இருந்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் டயர்களுக்கு தீ வைத்து அவற்றை போலீசாரை நோக்கி வீசி எறிந்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கடலோர கிராமங்களில் அரசு பஸ்கள், லாரிகள் மீது போராட்டக்குழு ஆதரவாளர்கள் பல இடங்களில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது கல்வீச்சு நடந்து வருகிறது. இதனால் இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நிலைமை சீரான பிறகு போக்குவரத்து செயல்படுத்தப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

போலீஸில் சரணடைய உதயக்குமார் திட்டம்?

கூடங்குளம் சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்புக்காக முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் இன்று இரவு 9 மணிக்கு கூடங்குளம் காவல்நிலையத்தில் சரணடைய தயாராக இருப்பதாக அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.

 

கூடங்குளம் தாக்குதலுக்கு கண்டனம்: சென்னையில் அரசியல் கட்சியினர் மறியல்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் நடத்திய கொடுந்தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அரசியல் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் உள்ளிட்ட பல நூறு பேர் கைதாகினர்.

TAGS: