கூடுங்குளம் விவகாரம் : சென்னையில் பேருந்துகள் மீது கல்வீச்சு

கூடங்குளத்தில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தடியடி, மற்றும் கண்ணீர்புகை பயன்படுத்தியது, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட போலீசார் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறியிருக்கின்றன.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். மற்றொரு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன், ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் த.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கல்வீச்சில் ஓரிரு பேருந்துகள் சேதமடைந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடங்குளத்திலும், தூத்துக்குடியிலும் பதட்டமான சூழல் தொடர்கிறது. இடிந்தகரை தேவாலய வளாகத்தில் போலீசாரைக் கண்டித்து உண்ணாநோன்பு இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர், மணப்பாடு, புன்னக்காயல், வேம்பார் போன்ற பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைபடகுகள், நாட்டு படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என செய்திகள் கூறுகின்றன.

கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகை மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பாம்பனில் மீனவர்கள் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.

இன்னமும் கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் கைதாகவில்லை. நேற்று கூடங்குளம் கடற்கரை அருகே குழுமியிருந்த் எதிர்ப்பாளர்களைத் தடியடி மூலம் போலீசார் கலைத்தபோது உதயகுமாரும் மற்ற தலைவர்களும் அவர்கள் கையில் சிக்கவில்லை, அவர்களைத் தீவிரமாகத் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே போராட்டக்குழு தலைவர் உதயகுமார் மக்களின் நலன் கருதி தான் கூடங்குளம் போலீசில் சரணடையப் போவதாக அவர் நேற்று அறிவித்தார். இதையடுத்து நேற்று மாலை இடிந்தகரை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.

ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு இடிந்தகரை வந்தார். இந்நிலையில் தான் அறிவித்தவாறு சரணடைய உதயகுமார் கிளம்பியதாகவும், போராட்டக்காரர்கள் அவரை சரணடையவிடாமல் படகில் ஏற்றி திருப்பி அனுப்பியதகாகவும் தகவல் கிடைத்துள்ளது.

TAGS: