கூடங்குளம் அணு உலை விவகாரம்: கடலில் இருந்து எதிர்ப்புப் போராட்டம்!

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை கடலில் ஜல சத்யாகிரகப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

பெண்கள் உள்பட ஏராளமானவர்கள், கூடங்குளம் அருகே கடலுக்குச் சென்று, காலை முதல் மாலை 4 மணி வரை கடலில் நின்று கொண்டு, அணு உலையிலிருந்து தங்களைக் காக்கக் கோரி பிரார்த்தனை செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, நேற்றுமுன்தினம் மாலை முதல் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கும் போராட்டக் குழுவின் தலைவர் சுப. உதயகுமார் அவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் வெளியே வருவார் என்று ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ரொசாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

பேரிடர் பயிற்சி மற்றும் அணு உலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு என்ன என்பது தொடர்பாகக் கூட அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வராத நிலையில், அந்த அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தினால், அணு உலைக்கு எதிரான போராட்டம் கைவிடப்படுமா என்று கேட்டபோது, அந்தச் சூழ்நிலையில் போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தி உரிய முடிவெடுப்பார்கள் என்று ரொசாரி தெரிவித்தார்.

மேலும், கூடங்குளம் அணு உலைக்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு நியாயம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதனிடையே, கூடங்குளத்தில் சகஜநிலை நிலவுவதாகத் தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி, உதயகுமார் இருக்கும் இடம் குறித்து துப்புக் கிடைத்திருப்பதாகவும், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.

TAGS: