இடிந்தகரையில் கடலில் இறங்கி போராட்டம்: தலைக்கு மேல் விமானம்!

தமிழகம்: கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் நேற்று காலை 11 மணி அளவில் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 6 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது திடீரென்று கடலோர காவல்படையின் விமானம், போராட்டக்காரர்கள் நிற்கும் இடத்தில் தாழ்வான நிலையில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பொருட்டு தாழ்வான நிலையில் விமானம் பறந்ததாக கூறப்படுகிறது.

கூடங்குளத்தில் அணுஉலையை மூட வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கைதானவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இடிந்தகரையில் லூர்து மாதா ஆலயம் முன் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் 48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இடிந்தகரையில் வியாழக்கிழமை முதல் கடலுக்குள் இறங்கி நின்று போராட்டம் நடத்த போராட்டக் குழு முடிவு செய்தது. அதன்படி கடலுக்குள் இறங்கி நின்று போராட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

இந்த நூதனப் போராட்டத்துக்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மை.பா.ஜேசுராஜன் தலைமை வகித்துப் பேசியதாவது: உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் போராட்டம் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே ஓராண்டுக்கு மேலாக நடத்தப்படும் போராட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. நாங்கள் அரசுக்கும், காவல்துறையினருக்கும் எதிரானவர்கள் அல்லர். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியது தமிழக அரசுதான். எனவே எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்துகிறோம் என்றார் அவர்.

முன்னதாக, இடிந்தகரையில் இருந்து பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து சவேரியார் ஆலயத்தையொட்டி கடற்கரையில் திரண்டனர். காலை 11.15 மணியளவில் இடிந்தகரையில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ள கடற்பகுதிக்குள் அவர்கள் அனைவரும் கடலுக்குள் இறங்கினர்.

இதற்காக கடலில் மிதவைகளுடன் கயிறுகளும் கட்டப்பட்டிருந்தன. அவற்றைப் பிடித்துக்கொண்டு பெண்களும், இளைஞர்களும் கடலில் வரிசையாக அணிவகுத்து நின்றனர். கடலில் அலைகளைப் பொருள்படுத்தாமல் கைகளைக் கோத்தபடி அவர்கள் கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் போலீஸாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பெண்கள் சிலர் தங்கள் குழந்தைகளுடன் கடலில் இறங்கி நின்றிருந்தனர்.

கடலுக்குள் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு அவர்கள் வரிசையாக அணிவகுத்து நின்றனர். சிறுவர், சிறுமியர் சிலர் பாதுகாப்புக் கவசங்களை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர். கடலுக்குள் இளைஞர்கள் சிலர் கறுப்புக் கொடிகளை ஏந்தி நின்றனர். கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

போராட்டம் நடந்து கொண்டிருந்த பகுதிக்குமேல் கடலோர காவல்படை விமானம் தாழ்வாகப் பறந்து வானில் வட்டமடித்தது. அவ்வாறு 8 முறை வானில் விமானம் பறந்து சென்றபோது போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உதயகுமார் வீட்டில் போலீஸார் சோதனை

நாகர்கோவிலில் உள்ள, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் வீட்டில் போலீஸார் நீதிமன்ற சம்மன்களை வியாழக்கிழமை வழங்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உதயகுமார், அவரது மனைவி மீராகுமார் ஆகிய இருவரும் வள்ளியூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 18) ஆஜராக வேண்டும் என அந்த சம்மன்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீஸார் நாகர்கோவில் பறக்கை சந்திப்பில் இசங்கன்விளை மணிவீதியில் உள்ள உதயகுமாரின் வீட்டுக்கு வியாழக்கிழமை பிற்பகலில் வந்தனர்.

அப்போது வீட்டில் அவரது தந்தை பரமார்த்தலிங்கம் இருந்துள்ளார். பின்னர் போலீஸார் வீட்டை சோதனையிட்டனர். இதையடுத்து 3 சம்மன்களை பரமார்த்தலிங்கத்திடம் போலீஸார் கொடுத்தனர். இரண்டு சம்மன்கள் உதயகுமாருக்கும், ஒரு சம்மன் அவரது மனைவி மீராகுமாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகள் தொடர்பாக உதயகுமாரும், அவரது மனைவியும் இம்மாதம் 18-ம் தேதி காலை 10 மணிக்கு வள்ளியூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதயகுமாரின் தந்தை கூறியதாவது: போலீஸார் சம்மனை அளித்து வெள்ளைத் தாளில் கையெழுத்திட வேண்டும் என்றனர். நான் முடியாது என மறுத்து விட்டேன். என் மகன் மக்களுக்காகப் போராடி வருகிறான். அவன் உலக அளவில் பெயர் பெற்றுவிட்டான். அவனை நான் பாராட்டுகிறேன் என்றார் அவர்.

48 கிராமங்களில் மீனவர்கள் வேலைநிறுத்தம்

கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவத்தைக் கண்டித்து, குமரி மாவட்டத்தில் 48 கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்ட அணுசக்திக்கு எதிரான மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடற்கரை கிராம மக்கள் செப்டம்பர் 13-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த கடற்கரைப் பகுதி மக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். குளச்சல் பகுதியை மையமாகக் கொண்டு மீன்பிடிக்கச் செல்லும் கொட்டில்பாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. பள்ளம், ராஜாக்கமங்கலம்துறை, கேசவன்புத்தன்துறை உள்ளிட்ட கிராமங்களில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மீனவர் கூட்டமைப்புத் தலைவர் தி. பெர்லின் கூறியதாவது: வேலைநிறுத்தத்தில் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.5 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரின் தடியடியைக் கண்டிக்கும் வகையிலும், அணுமின் நிலையத்தை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

TAGS: