தமிழகம் கேட்ட தண்ணீரைத் தர முடியாது; கர்நாடகம் கைவிரிப்பு

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதன்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

தமிழகம் கேட்ட தண்ணீரைத் தர முடியாது என கர்நாடகம் மறுத்துவிட்ட நிலையில், இந்தக் கூட்டம் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கர்நாடகத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜோசப் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 15 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரைக் காப்பாற்ற 24 நாட்களுக்கு குறைந்தபட்சம் தினசரி 2 டிஎம்சி திறந்துவிட வேண்டும் என கோரியதை கர்நாடகம் ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.

அதன்பிறகு, அக்டோபர் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிவிடும் என்பதால், அந்தப் பயிரைப் பாதுகாக்க 30 நாட்களுக்கு தினசரி ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழகம் வைத்த கோரிக்கையையும் கர்நாடகம் நிராகரித்துவிட்டதாக ஜெயலலிதா தெரிவித்தார்.

ஒருமித்த கருத்து ஏற்படாததால், காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில், செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தினசரி 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பிரதமர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். அதை கர்நாடகம் ஏற்கவில்லை. அவர் குறிப்பிட்ட அளவு எதற்குமே போதாது என்பதால் தானும் அதை நிராகரித்துவிட்டதாக ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்த நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவதைத்த தவிர தமிழ்நாட்டு்க்கு வேறு வழியில்லை என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

பற்றாக்குறை காலங்களில் காவிரி நீரை பகி்ர்ந்து கொள்வது தொடர்பான வழிகாட்டு முறைகள் இறுதி செய்யப்பட வேண்டும் என தான் கோரியதாகவும் ஆனால் அதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

-BBC

TAGS: