இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்திய மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு செல்ல முயன்ற மதிமுகவினர் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள சாஞ்சி நகரில், பௌத்த மதக் கல்வி மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் சரித்திரம், கலை, கலாச்சாரம் தொடர்பான படிப்புகளுக்கான பல்கலைகழகம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு வந்துள்ள இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்காகவே மதிமுகவினர் அங்கு சென்றனர்.
சாஞ்சி நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாற்பதுக்கு மேற்பட்ட பேருந்துகளில் தமிழ்நாட்டிலிருந்து சென்றனர். எனினும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தப் போராட்டத்தில் பங்குபெறச் சென்ற யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி, இன்று வியாழக்கிழமை இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.
அதன் பிறகு நாளை வெள்ளிக்கிழமை சாஞ்சியில் நடைபெறவுள்ள நிகழ்வில் அவர் பங்கேற்கிறார் என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.