இலங்கையில் புயல் அச்சம் நீங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் ஆந்திராவிலும் சில பகுதிகளை இன்று புதன்கிழமை புயல் தாக்கலாம் என்று தென்னிந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் கடுமையான மழைபெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் வடக்கு கரையோரத்திலேயே புயல் கரையை கடக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழை எச்சரிக்கையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இன்று மூடப்பட்டிருந்தன. இரண்டு மாநிலங்களின் மீனவர்களும் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் நாகபட்டிணம் மற்றும் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டங்களுக்கு இடையே எந்த இடத்திலும் நாளை புதன்கிழமை மாலை அளவில் புயல் கரையை கடக்கலாம் என்றும் ஆந்திராவின் தென் கரையோரங்களையும் புயல் தாக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2011 டிசம்பரில், புதுச்சேரி நகருக்கு அருகே தாக்கிய புயலில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், பல வீடுகள் சேதமடைந்தன.
2010 மே மாதத்தில் ஆந்திராவை தாக்கிய சக்திவாய்ந்த புயலொன்றில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் பேரழிவுகளும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.