இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டனின் ஒரு உளவாளியாக செயல்பட்ட இந்திய அரச குமாரியை கௌவுரவப்படுத்தும் வகையில் அவரின் சிலை இலண்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இராஜ குடும்பத்தைச் சேர்ந்த நூர் இனியத் கான் என்ற இளம்பெண், இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் அதி விசேட உளவுத் துறையில் சேர்ந்தார். ஹிட்லரின் நாஜிப் படையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பிரான்சில் கம்பி இல்லாத் தந்தியை இயக்குபவராக பணியாற்றுமாறு அவர் பணிக்கப்பட்டார். அவ்வாறு பணிக்கப்பட்ட முதல் பெண் அவரேயாவார்.
பிரன்ச் மற்றும் ஆங்கில மொழிகளை நன்கு அறிந்திருந்த நூர், ஜெர்மனியின் ஜெஸ்டபோ படைகளால் கைது செய்யப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டார். உணவு கூட இவருக்கு மறுக்கப்பட்டது. இருந்தும் இவர் இரகசியங்கள் எதையும் வெளியிட மறுத்தார். இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூறும் வகையில் பிரிட்டிஷ் மகாராணியின் புதல்வியான இளவரசி ஆன், நூர் இனியத் கானின் சிலையைத் திறந்து வைத்தார். இந்த வைபவத்தின் போது நூரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சமூகமளித்திருந்தனர்.