இந்திய பிரஜைகளில் ஒருவராக உணர்கிறேன்: ஆங் சாங் சூச்சி

புதுடில்லி: இந்தியாவில் இருக்கும் போது, இந்திய பிரஜைகளில் ஒருவராக உணர்வதாக மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார். டில்லி வந்துள்ள மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சாங் சூச்சி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை டில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சூச்சி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நான் படித்த இந்த கல்லூரிக்கு மீண்டும் வருவேன் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. இந்த ஹாலில் காந்தியின் பாடல்களில் ஒன்றான ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை நான் பாடியிருக்கிறேன். தற்போது இந்திய பிரஜைகளில் ஒருவராக நான் உணர்கிறேன்.

இந்த உலகில், இளைய தலைமுறையின் நம்பிக்கைகளும், உயிர்ப்புகளும் ஒன்றிணைந்து உள்ளன. இளைய தலைமுறையினரின் வெளிப்படைத்தன்மை, அவர்களின் பெருந்தன்மை ஆகியவை அவர்களின் உள்ளங்களில் கசப்பு, கோபம் ஆகியவை இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்த உள்ளங்கள் நம்மை நிச்சயம் முன்னேற்றும். எனது நம்பிக்கைகள் வீணாகி விட வில்லை என நினைக்கும் இடத்தில் நான் தற்போது இருக்கிறேன். அனுபவங்கள் கசப்பானதாவோ அல்லது மகிழ்ச்சியானதோ, அதை நீங்கள் அணுகும் முறையில் தான் உள்ளது.

நீங்கள் உங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவரானால் உங்களுக்கு எனது அறிவுரை, தயவு செய்து நீங்கள் அரசியலில் ஈடுபடாதீர்கள். ஏனெனில் கொள்கையற்ற அரசியலே இந்த உலகத்தில் மிகவும் பயங்கரமானது. பர்மாவில் (மியான்மர்) நாங்கள் ஜனநாயக அரசியலை உருவாக்கியிருக்கிறோம். எந்த கனவும் இயலாதது என்று நான் நினைக்கவில்லை. நானும், இந்தியாவும் அறிவுத்திறன் மற்றும் உணர்வு ரீதியாக இணைக்கப்பட்டுள்ளோம்.

பர்மாவில் நாங்கள் ஜனநாயகத்தை இன்னும் வென்றுவிட வில்லை. அதற்காக முயற்சி செய்து வருகிறோம். அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை. உங்களுக்கு இந்த கல்லூரியில் கிடைப்பவை, எங்களது மாணவர்களுக்கு பர்மாவில் இன்னும் கிடைக்கவில்லை. பர்மிய இளைஞர்களுக்கு கல்லூரி வாழ்க்கை என்னவென்றே தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வகுப்புக்கு வருவது, லெக்சர்களை கேட்பது மீண்டும் வீடுகளுக்குச் சென்று விடுவது மட்டுமே. வகுப்புகளுக்கு வெளியே உள்ள கல்லூரி வாழ்க்கை குறித்து பர்மிய இளைஞர்களுக்கு எதுவுமே தெரியாது.

இந்தியாவிலிருந்து நான் வெகுதூரத்தில் இருப்பதாக நினைக்கவில்லை. நான் இந்தியாவிற்கு வந்ததில் இருந்து, நமது நட்பு மீதான எனது நம்பிக்கை நியாயமானது என்பதை உணர்கிறேன். இந்த நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து, ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து ஜனநாயகத்தை நோக்கி நம்மை நடைபோடவைக்கும்” என்று உணர்வு பொங்க பேசினார்.

TAGS: