கூடங்குளம் அணுக்கழிவுகளை புதைக்க கோலாரில் எதிர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியாகும் அணுக் கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், மூடப்பட்ட தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கப் போவதாக இந்திய அரசு தெரிவித்திருப்பதற்கு கோலாரில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்திய நடுவணரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, இன்று (நவம்பர்23) கோலார் பகுதியில் ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக கோலார் தங்கவயல் மக்கள் உரிமை பாதுகாப்பு முன்னணியின் தலைவர் ராஜேந்திரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் பலவும் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்த ராஜேந்திரன், அணுக்கழிவுகளை கோலார் சுரங்கங்களில் சேமித்து வைப்பதாக கூறும் இந்திய மத்திய அரசின் முடிவு கோலார் பகுதிவாழ் மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருப்பதாக கூறினார்.

இந்த அணுக்கழிவுகள் குறித்து தாங்கள் சில விஞ்ஞானிகளிடம் கலந்தாய்வு செய்ததாகவும், இந்த கழிவுகள் கோலாரில் கொண்டுவந்து சேமித்து வைக்கப்படுவதன் மூலம் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள தாவரங்களுக்குக் கூட கடும் பாதிப்புக்கள் ஏற்படுத்தும் என்று தம்மிடம் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பதாகவும் ராஜேந்திரன் கூறினார். இந்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, தாங்கள் நீதிமன்றங்களை அணுகப்போவதாகவும் அவர் கூறினார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், தற்போது பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டிருக்கும் தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கப் போவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதனன்று தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து கோலார் பகுதியில் இந்த எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

TAGS: