முகநூலில் விமர்சனம் செய்தவர்களை கைது செய்த போலீசார், பணியிருந்து இடைநிறுத்தம்

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறுதி ஊர்வலம் மும்பையில் நடந்த போது மும்பையில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தானே நகரில் வசிக்கும் ஷகீன் தத்தா என்ற மாணவி தனது பேஸ்புக்கில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டதை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

அவரது கருத்தை தோழி ரினி, ஆமோதித்து இருந்தார். இந்த கருத்து வெளியான ‘பேஸ் புக்’ கணக்கின் முகவரி, ஷகீன் தத்தா உறவினர் டாக்டர் அப்துல் தத்தா மூட்டு சிகிச்சை மையத்தில் இருந்தது. இதை கண்டுபிடித்த சிவசேனா தொண்டர்கள், பால்கர் பகுதியில் இருக்கும் அந்த கிளினிக் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து மும்பை போலீசார் 2 மாணவிகளையும் கைது செய்தனர். அவர்கள் மீது விரோத மனப்பான்மையை ஏற்படுத்துதல், மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் பதினைந்தாயிரம் ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று நாடெங்கும் எதிர்ப்புக் குரல் ஒலித்தது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும்  தகவல் தொழில் நுட்ப மந்திரி கபில் சிபல் உள்பட, அரசியல்வாதிகள் பலர் மும்பை போலீசாருக்கு கண்டனம் தெரிவத்திருந்தனர். போலீசாரின் நடவடிக்கை மீது விசாரணை நடத்த மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி பிரிதிவி ராஜ் சவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் நடந்த 2 வாரங்களுக்கு பிறகு, தானே புறநகர் போலீஸ் சூப்பிரண்ட் ரவீந்திர செங்கோங்கர், பால்கர் போலீஸ் நிலைய மூத்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீ காந்த் பிங்லே ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய போலீஸ் டி.ஜி.பி.க்கு மும்பை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பேஸ் புக்கில் கருத்து வெளியிட்ட ஷகீன் தத்தா உறவினர் கிளினிக்கை உடைத்து, சுமார் ரூ. 20 லட்சம் சேதம் விளைவித்த குற்றவளிகள் 10 பேரை வெறும் ரூ. 7 ஆயிரத்து 500 ஜாமினில் விடுதலை செய்த பால்கர் மாஜிஸ்திரேட் ராமச்சந்திர பகாடேவையும் பணிமாற்றம் செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

TAGS: