காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடகம் மீறியதாக தமிழகம் புகார்

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை மீறி, கர்நாடகம், சாகுபடி பரப்பளவை 50 சதம் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இரு மாநில முதல்வர்களும் கடந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, இதுதொடர்பான வாதம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல், நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் முன்பு நடைபெற்று வருகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்யநாதன், கர்நாடக அரசின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்தார்.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மீறி, கர்நாடகம் சாகுபடிப் பரப்பளவை 50 சதம் அதிகரித்துள்ளது. அதற்குத் தேவையான அளவு தண்ணீரையும் தேக்கி வைத்துக் கொள்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. ஏற்கெனவே 106 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்திவிட்டது என்று வைத்யநாதன் சுட்டிக்காட்டினார்.

ஏற்கெனவே, கர்நாடகம் ஒரு சாகுபடியை நிறைவு செய்துவிட்ட நிலையில், அடுத்த சாகுபடிக்காக தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு ஒரு சாகுபடியைக் கூட செய்ய முடியவில்லை. குறுவை சாகுபடி ஏற்கெனவே பாதிக்கப்பட்டுவிட்ட நிலையில், சம்பா சாகுபடி காலதாமதமாக செப்டம்பர் இறுதியில்தான் துவக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. அதில் தண்ணீர் கிடைக்காவிட்டால் பயிர்கள் காய்ந்து நாசமாகிவிடும். இது தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு மட்டுமன்றி உணவுப் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும் என்று வைத்யநாதன் எச்சரித்தார்.

தமிழ்நாடு 37 டிஎம்சி தண்ணீரை இப்போது கேட்பது, ஏதோ ஓர் அளவு என்ற அடிப்படையில் இல்லாமல், பற்றாக்குறை காலத்தில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் கேட்பதாக வைத்யநாதன் தெரிவித்தார்.

கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால், தமிழக அரசு தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஏற்கத்தக்கதே அல்ல என்று வாதிட்டார்.

வாதத்தின் இடையில், நதிநீர் பங்கீட்டை முறைப்படுத்த ஏதாவது ஒழுங்குமுறை ஆணையம் இருக்கிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, காவிரி நதிநீர் ஆணையம் மட்டும்தான் இருப்பதாகவும் ஆனால், அடிக்கடி பிரதமரை தொல்லைபடுத்த தாங்கள் விரும்பவில்லை என்றும் வைத்யநாதன் சுட்டிக்காட்டினார்.

TAGS: