டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி , நேற்றிரவு சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
டெல்லியில் கடந்த 16 ம் தேதி இரவு மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேருந்தில் பயணம் செய்தபோது 6 பேர் சேர்ந்த கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு இரும்பு தடியால் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அந்த மாணவிக்கு ஜப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாணவியின் வயிற்றில் இரும்பு கம்பியால் தாக்கியதால் சிறுகுடல் பகுதி சேதம் அடைந்தது. அந்த இடத்தில் பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டது. சேதம் அடைந்த குடல்பகுதி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.
கடந்த 10 நாட்களாக மாணவி உயிருக்கு போராடி வருகிறார். 24 மணி நேரமும் டாக்டர்கள் அருகில் இருந்து உடல்நிலையை கண்காணித்து வந்தனர். செயற்கை சுவாசம் மற்றும் மருத்து உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். ஆபரேசன் செய்யப்பட்ட இடத்தில் ரத்தக் கசிவும், தொற்றும் ஏற்பட்டது. ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருப்பதால் ரத்தப்போக்கு அபாயம் உள்ளது. இதனால் உடல் உறுப்புகள் செயல் இழக்கும் நிலை ஏற்படலாம் என்று டாக்டர்கள் அச்சம் தெரிவித்தனர்.
நேற்று மாலை 4.30 மணிக்கு மாணவியின் உடல் நிலை பற்றி, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடுவதாக இருந்தது. பின்னர், அறிக்கை வெளியிடும நேரம் 6.30 மணியாக ஒத்திவைக்கப்பட்டது. இரவு 10 மணிவரை மாணவியின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில், சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் இருந்து, அந்த மாணவியை ஏற்றிக்கொண்டு, ஆம்புலன்ஸ் ஒன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நோக்கி விரைந்தது. பின்னர் அவர் ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள பிரபலமான மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில் அவரை தற்போது சேர்த்துள்ளனர்.
உடலின் உள்ளுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகபுகழ் பெற்ற இந்த மருத்துவமனையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அமர் சிங்கிற்கு 2009 ஆண்டு வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.