சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இன்று அதிகாலையில் இறந்தார். இவரது இறப்பு இந்தியா முழுவதும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதுடன், டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. பிரதமர், உள்துறை அமைச்சர் என பல தரப்பினரும இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் , ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்த போது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர்.
இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
மாணவி கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர் பிரிந்தது. கடந்த 13 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.
முன்னதாக மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் ,அதிகாலை 2.15 மணியளவில் மாணவி உயிரிழந்தது குறித்த தகவலை இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார். இறந்த மாணவிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
உயிரிழந்த மருத்துவம மாணவியின் உடல் பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதையடுத்து அந்நாட்டு இந்திய தூதரகத்துடன் இந்தியா அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எனவே மாணவியின் உடல் விரைவில் இந்தியா வர உள்ளது.
மருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மாணவி உயிரிழந்ததையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா கேட், ரைசினா ஹில்ஸ் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ராஜ்பத், விஜய் சவுக், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதைகள் மூடப்பட்டதுடன், கமல் அட்டடுர்க் மார்க் பகுதியும் மூடப்பட்டதுடன், இந்த பகுதிகளை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அனைவரும் அமைதி காத்திட வேண்டும் என டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கிட அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள்ன என்றார்.
16 ம் தேதி தாக்குதலுக்குள்ளான மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது முதன்முதலாக அவரை தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர் பேசுகையில்: “நான் வாழ விரும்புகிறேன் அம்மா, என்னை இந்த கொடுமைக்கு ஆளாக்கிய இந்த நபர்களை சட்டத்தி்ன் முன் நிறுத்தி எனக்கு நீதி கிடைக்க வேண்டும் அம்மா” என்றாராம்.