அப்ளிகேசன் (Application) எனக் கூறப்படும் பயன்பாட்டு மென்பொருள் ஊடாக (free calling) இலவச அழைப்பினை மேற்கொள்ளும் வசதியினை முகநூல் (Facebook) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால், இப்புதிய வசதியினை தற்போது ஐபோன் (iPhone) பாவனையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அண்ட்ரோய்ட், பிளக்பெரி போன்ற முன்னணி தொலைபேசி இயங்குதளங்களுக்குச் இச்சேவை வழங்கப்படவில்லை.
முகநூல் மெசெஞ்சர் அப்ளிகேசன் (facebook messenger app) ஊடாக இந்த இலவச அழைப்பு வசதியை பயன்படுத்த முடியும். இதற்கு தொலைபேசி இணைய வலையமைப்பு அல்லது வை-பை இணைய வலையமைப்பு தேவைப்படும்.
தற்போது அமெரிக்காவில் உள்ள ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வசதி கூடிய விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முகநூல் நிர்வாகம் இவ்வசதியை இம்மாத ஆரம்பத்திலிருந்து கனடாவில் பரிசோதித்துள்ளது. எனினும், நேற்று முன் தினம் இடம்பெற்ற நிகழ்விலேயே இதனை அதிகாரப்பூர்வமாக முகநூல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இதே நிகழ்வில் ‘Graph Search’ எனப்படும் முகநூலினுள் தேடலை இலகுபடுத்தும் வசதியொன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது.
முகநூலில் உள்ள மாபெரும் தரவுத் தொகுப்பில் இருந்து பாவனையாளர்களுக்கு தேவையானதை இலகுவாக தேடி வழங்குவதே இதன் நோக்கம் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
நபர்கள், இடங்கள், ஆர்வங்கள், படங்கள் ஆகியவற்றை இதனூடாக இலகுவாக தேடிக்கொள்ள முடியும்.