கமல் ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம், பல சர்ச்சைகளுக்கிடையே ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இது குறித்த மற்றுமொரு சர்ச்சை இப்போது எழுந்திருக்கிறது.
இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. இந்தப் படம் திரையிடப்படுவதற்கு எதிராக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அவை நேற்று செவ்வாய்க்கிழமை மனு ஒன்றைத் வழங்கியுள்ளன.
முன்னதாக இந்தப் படத்தை கமலஹாசன் வீட்டில் பார்த்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா படத்தின் பல காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருக்கிறது என தெரிவித்தார்.
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் தமிழகத்தின் கோவையில் ஒரு ஆண்டு இருந்ததகாவும், 12 வயதேயான முஸ்லிம் சிறுவன் ஆயுதங்கள் குறித்த அறிவு கொண்டுள்ளதாக காட்டப்பட்டதாகவும், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிரார்த்தனை செய்வது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
கலைஞர்களுக்கு ஒரு கலைப் படைப்பை உருவாக்கும் சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று வாதிடும் ஜவாஹிருல்லா சமூகப் பொறுப்பின்றி இப்படம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.