தஞ்சாவூர்: தமிழன் தயாரித்து, உருவாக்கி, நடித்த தமிழ் படத்தை தமிழகத்தில் திரையிட முடியாதது அவமானமாகும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கமல்ஹாசனா் நடிப்பில் திரைக்கு வந்தும், வராமலும் இருக்கும் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாட்கள் தடை விதித்தது. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களும், ரசிகர்களும் தாக்கப்பட்டனர்.
சுதந்திர நாட்டில் வெட்கக்கேடாகவே நடந்து கொண்டிருக்கிறது. தமிழனால் தயாரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, நடிக்கப்பட்ட தமிழ் படத்தை தமிழகத்திலேயே திரையிட முடியாத நிலை உள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானமாகும்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் விஸ்வரூம் சுதந்திரமாக திரையிடப்படுகிறது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவில் கூட திரையிட்டப்பட்டுள்ளது. தமிழகம் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் மையமாக மாறியுள்ளது.
காஷ்மீர் முதல் கேரளா வரை மதச்சார்பற்ற மாநிலம் இந்தியாவில் இல்லையென்றால் வெளிநாட்டில் குடியேறுவேன் என்று கமல் கூறியது ஏற்கத்தக்கதல்ல. இந்த கருத்து தமிழகம் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மாநிலமாகவிட்டது என்பதைப் போன்றாகும். இது தவறான கருத்து.
தமிழகத்தில் விஸ்வரூபத்தை திரையிட்டால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை யார் கெடுக்கிறார்கள் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு போலீஸ் பற்றாக்குறை இருப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ராணுவத்தை கூட அழைக்கலாம். சென்சார் போர்டு தகுதியில்லாத படத்திற்கு சான்றிதழ் கொடுத்துள்ளதா? அப்படி என்றால் சென்சார் போர்டை கலைக்க வேண்டும் என்றார்.