இலங்கை வீரர்கள் பங்குபெறும் ஆசிய தடகளப் போட்டிகளை ரத்து செய்தார் ஜெயலலிதா

cm_jayaதமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை விளையாட்டு வீரர்களும் பங்கு பெறக்கூடும் என்ற நிலையில் இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படமாட்டாது என அறிவித்திருக்கிறார்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் அப்போட்டிகளை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் இலங்கை வீரர்களும் பங்கு பெற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும் என்பதால், அவர்களை அனுமதிக்கமுடியாது என ஆசிய தடகள கழகம் மற்றும் இந்திய நடுவன அரசிற்கும் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை ஆசிய தடகளக் கழகத்திடமிருந்து எவ்வித பதிலும் தமிழக அரசிற்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறுகிறார்.

இந்நிலையில் போட்டிகளை வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகளக் கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் கூட நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்குபெற வந்திருந்த இலங்கை கால்பந்து வீரர்கள் தமிழக அரசால் திருப்பி அனுப்பப்பட்டதையும் முதல்வர் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

TAGS: