ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை இணைக்க இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய மத்திய அரசில் தொடராது என்று அதன் தலைவரான மு. கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானங்கள் குறித்து பல கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த அய்யப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. வின் சார்பில் வலியுறுத்துவதாகக் கூறுகிறார்.
அத்தகைய கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திமுக இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாகவும் கருணாநிதி மேலும் கூறுகிறார்.