தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் உண்ணாவிரதம்!

Japan-Protestடோக்கியோ: இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகவும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் டோக்கியோ வாழ் இந்தியத் தமிழர்கள் ஞாயிறன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

இணைய தளங்கள் வாயிலாகவும், சமூகவலைத் தளங்கள் மூலமும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன், டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக தமிழகர்கள் திரண்டனர்.

நேற்று முன்தினம் காலை ஜப்பான் நேரம் 9 மணிக்கு சரியாக உண்ணாநிலை அறப்போராட்டம் தொடங்கியது. டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் நேற்று சகுரா கொண்டாட்டங்கள் நிகழ்ந்தமையால், இந்தியர்களும், ஜப்பானியர்களும் அங்கு திரண்டிருந்தனர்.

ஈழத்தமிழர்கள் 60 ஆண்டுகாலமாக அனுபவித்து வரும் துயரம் குறித்தும், 2009ல் ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்தும் பலகைகளில் எழுதி ஏந்தி நின்றனர் எமது போராட்டகாரர்கள். இது மிகப் பெரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தமிழர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் காண்போரை உறையச் செய்தது.