மக்களவைத் தேர்தலில் கூடங்குளம் அணுஉலை பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்வது குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 600 நாள்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடாத மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களோடு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மில்டன், மை.பா.ஜேசுராஜன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலர் பரந்தாமன், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன், மிசா பாண்டியன், அரங்ககுணசேகரன் மற்றும் பாளையங்கோட்டை, மதுரை, ஈரோடு, திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், தேர்தலில் பங்கேற்கக்கூடிய அரசியல் கட்சியினரிடமும் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.