“ஆப்பிரிக்கர்களை நாய் போல நடத்துகின்றனர் இந்தியர்கள்”

indian_living_in_mumbaiஇந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையிலும் சுற்றியுள்ள இடங்களிலும் தங்கியுள்ள ஆப்பிரிக்கர்கள், தாங்கள் இனத்துவேஷத்தையும், இடைவிடாத பொலிஸ் தொந்தரவுகளையும் எதிர்கொள்வதாக முறையிடுகின்றனர்.

இந்திய பெண்னை திருமணம் செய்து மும்பையில் வசிக்கும் நைஜீரியரான சாம்போ டேவிஸை அண்மையில் போலிசார் கைதுசெய்திருந்தனர். முறையான ஆவணங்கள் எல்லாம் இருந்தும், போலிசார் எதுவும் சொல்லாமல் இவரைக் கைதுசெய்து கொண்டுசென்றனர்.

இவர் மட்டுமல்லாது கருப்பின ஆப்பிரிக்கர்கள் வேறு முப்பது பேரையும் மணிக்கணக்கில் தடுத்துவைத்துவிட்டு பிற்பாடு மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியில் விட்டுவிட்டார்களாம்.

அடுத்த நாள் பத்திரிகையில் பார்க்கும்போதுதான் “போதை மருந்து கடத்திய சந்தேகத்தின் பேரில்” தம்மைக் கைதுசெய்திருக்கிறார்கள் என்று இவருக்குத் தெரியவந்துள்ளது.

போலிசார் தன்னைப்போன்ற ஆப்பிரிக்கர்களை நாய்போல நடத்துகிறார்கள் என்று டேவிஸ் குற்றம்சாட்டுகிறார்.

உணவு விடுதிகளுக்கு செல்லும்போதும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாடகைக்கு கேட்டுச் செல்லும்போதும் அதிகமான பாரபட்சங்களை ஆப்பிரிக்கர்கள் சந்திப்பதாக இவர் கூறுகிறார்.

“கருப்பர் நைஜீரியர்களுக்கெல்லாம் வீடு கொடுக்க முடியாது என்று பல இடங்களிலும் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறார்கள். இதை இனத்துவேஷம் என்றில்லாமல் வேறு எப்படிச் சொல்வது?” என்று ஆப்பிரிக்கர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மும்பையில் எத்தனை ஆப்பிரிக்கர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு உத்தியோகபூர்வ புள்ளிவிவரமெல்லாம் கிடையாது. ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகம்பிடித்த அண்மைய ஆண்டுகளில் ஆப்பிரிக்கர்கள் பலர் இவ்வூரில் வந்து வாழவும் வேலைபார்க்கவும் செய்கின்றனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் மும்பையில் வசிப்பதாக உத்தியோகபூர்வமற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மும்பையில் வாழும் ஆப்பிரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியாவிலிருந்து நைஜீரியாவுக்கும் மற்ற மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஆடை ஏற்றுமதி செய்வோராக இருக்கின்றனர்.

இந்தியாவின் பிரபல கல்வி நிறுவனங்களில் வந்து படிக்கின்ற மாணவர்களுக்கும் இதில் இருக்கிறனர். அதேநேரம் நுற்றுக்கணக்கானவர்கள் முறையான சட்ட அனுமதி இன்றியும் இந்தியாவில் தங்கியிருக்கின்றனர்.

தங்களுடைய “கடவுச்சீட்டு தொலைந்து விட்டது” என்றோ “விசா முடிந்துவிட்டது” என்றோ இவர்கள் கூறுகின்றனர். போலிசாருக்கும் இவகளுக்கும் இடையில் ஒவ்வொருநாளும் கண்ணாமூச்சி ஆட்டம்தான். பிடிபட்டால் ஜெயில் என்பதாக இவர்கள் வாழ்க்கை செல்கிறது.

african_cafe_mumbaiலேகோஸைச் சேர்ந்த இகியோரா ஜூனியர் மும்பையில் ஆப்பிரிக்கர்களுக்கான சிற்றுண்டி விடுதி ஒன்றை நடத்துகிறார்.

“சட்டவிரோதமாக வாழ்பவர்களைப் பிடித்தால் நாட்டை விட்டு அனுப்ப வேண்டும் அதைவிட்டு சிறையில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று இவர் கேட்கிறார்.

ஆனால் மும்பை வாசிகளுக்கு ஆப்பிரிக்கர்கள் மீதான அபிப்பிராயமோ வேறு விதமாக இருக்கிறது.
ஆப்பிரிகர்களை “நீக்ரோ” என்றோ நிறத்தைக் குறிப்பிட்டு “காலியா” என்றோ இவர்கள் அழைக்கிறார்கள்.

“ஆப்பிரிக்கர்கள் போதைமருந்து விற்கிறார்கள், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், கறுப்பர்களை நம்பக்கூடாது” என மும்பைக்காரர் ஒருவர் சொன்னார்.

“ஆப்பிரிக்கர்கள் தமக்கும் கீழே உள்ளவர்கள் என்ற இனத்துவேஷ எண்ணம் இந்திய மக்களிடையே இருப்பதுதான் தாங்கள் எதிர்கொள்ளும் பாரபட்சங்களின் காரணம்” என சம்போ டேவிஸ் கூறினார்.

“எங்கள் நாட்டுக்கு எவ்வளவோ இந்தியர்கள் வந்து தொழில்செய்கிறார்கள். பெரும் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள். இந்தியர்களை நாங்கள் வெறுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

“அதுபோல ஆப்பிரிக்கர்களையும் இந்தியர்கள் வெறுக்கக்கூடாது என்பதே தனது விருப்பம்” என அவர் தெரிவித்தார்.

-BBC

TAGS: