மஇகா இடத்தை, ஹிண்ட்ராப் நிரப்புகிறது!

HINDRAF MEETS PMவழக்கறிஞர் கா. ஆறுமுகம், செம்பருத்தி.காம்

இந்தியர்களின் ஏங்கங்களை ஏந்தி வேதமூர்த்தி பிள்ளையார்தான் பிடிக்கிறார் என்று நம்பியபோது அது குரங்காக மாறியது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது.

கடந்த மார்ச் 10—ஆம் தேதி முதல், உயரிய நோக்கத்திற்காக தன் உடலை வருத்தி உண்ணாவிரதமிருந்த வேதமூர்த்தி, தன்னைப் பார்க்க வந்த மக்கள் கூட்டணி பிரதிநிதியுடன் பேச மறுத்து, நஜிப் என்றவுடன் கோட்டு சூட்டுடன் விழுந்தடித்துக்கொண்டு ஓட அப்படி என்ன நிர்பந்தம் அவருக்கு  என்ற கேள்வியும் எழுகிறது. தேர்தலில் வெல்ல நஜிப் எதையும் செய்வார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலை இவர்களிடம் இருந்துள்ளதையும் காட்டுகிறது.

அதிலும் மூன்றில் இரண்டு (Two Third Majority)  பெரும்பான்மையுடன் தேசிய முன்னணியை இந்தியர்கள் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று வேதமூர்த்தி அடித்த பல்டி, ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’என்பது போல் உள்ளது. ஒருவேளை இது அவர்களின் அந்த இரகசிய ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய சாரமாககூட  இருக்கலாம்.

அம்னோ இனவாதம்

அம்னோ ஆதிக்க அரசியலை முழுமையாக அம்மணமாக்கி, அது எவ்வாறு அரசாங்கத்தையே இனவாதமாக்கியது என்று வாய் கிழியக் கத்தி  ஹிண்ட்ராப் என தங்களைப்  பிரகடனப்படுத்திக் கொண்ட இந்த பல்டி அடித்த குழுவினரின் எப்படி இப்படி மாறினார்கள் என்பதில் பலத்த ஐயம் உள்ளது.

மலேசியாவின் அம்னோ இனவாத அரசியல், இனங்களுக்கிடையிலான உறவுகளைக்  காயப்படுத்தி அதனுள்ளே வேற்றுமைகளை வளர்த்து அதனால் உருவாக்கப்படும் பயத்தைத் தனது அரசியல் ஆயுதமாக கொண்டுள்ளது.

இன்று போதுமான மலாய்க்காரர்கள் விழிப்புணர்ச்சியடைந்த நிலையில் சொந்த பெரும்பான்மை இனத்தையே சுரண்டும் அம்னோவுக்கு எதிராக போராடுகிறார்கள்.

arumugam_suaram_newஆனால் சத்தியம், தர்மம், நீதி என்று பேசுபவர்கள் திடீரென்று இன்று ஒரு புதிய வியூகம் என்ற பல்லவியைப் பாடுகிறார்கள். அதன்வழிதான் நமக்கெல்லாம் விடிவெள்ளி என்கிறார்கள்.

ஹிண்ட்ராப் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், எங்களுக்குத் தேவை உரிமை; நம்பிக்கையல்ல என்று போட்ட கோசங்களுடன், “உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம். உணர்வை இழக்கலாமா” என்றும் “யுத்தங்கள் தோன்றட்டும், இரத்தங்கள் சிந்தட்டும், பாதை மாறலாமா… இரத்தத்தின் வெப்பத்தில், அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா” என உணர்ச்சி பொங்க ஆபாவாணன் இயற்றிய ஊமைவிழிகள் திரைப்பட பாடலைத்  தங்களது இயக்கப்பாடலாக பாடி, ஐம்பது ஆண்டுகளுக்கும்  மேலாக ஓர் ஆதிக்க இனவாத வர்கத்தின் பிடியில் அம்மணமாக்கப்பட்ட தமிழர்களுக்கு விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் கொடுத்தார்கள். அவை என்னவாயின?

அரசியல் நாடகம்

அரசியல் நாடகத்தில் மீண்டும் பகடை காய்களாக நாம் நகர்த்தப்பட வேண்டும் என்ற முட்டாள்தனமான கொள்கைதானே இவ்வளவு காலம் நம்மை அடிமைத்தனத்தில் வைத்திருந்தது என்பதை மறந்து விட்டனரா? அல்லது தேர்தல் கால பணப்பட்டுவாடா அவர்களின் கண்களை மறைத்து விட்டதா?

இவர்கள் கேட்டதில் தவறில்லை, ஆனால், இந்தியர்களின் ஓட்டுக்காக பேரம் பேசியதுதான் பிரச்சனைக்குறியது. மக்கள் கூட்டணி ஏற்கவில்லை அதனால் அம்னோவிடம் அடிபணிந்தோம் என்ற பரிதாப நிலைதான் இவர்களுக்கு இன்று. மஇகாவையும், இதர சில்லரை இந்திய பிரதிநிதி கட்சிகளையும் அம்னோ கூலிகள் என சாடிய இவர்களுக்கு இந்த புதிய ஞானோதயம் எப்பொழுது உருவானது?

மஇகா வரலாற்றில் சாமிவேலுவைவிட திறமையானவர்கள் இதுவரையில் இல்லை. அரசியலைச் சுவாசமாக கொண்டு அனைத்து இந்தியர்களின் பிரதிதிதியாக இருந்த அவரே, அம்னோ இனவாத அரசியலின் இடைவெளியில்தான் கெஞ்சிக்கூத்தாடி இந்தியர்களுக்கான உரிமைகளைச் சலுகைகளாக பட்டுவாடா செய்ய முடிந்தது. இவரைப் போன்றவர்கள் சோரம் போன சோகம் இன்னமும் மறையவில்லை.

சாக்கடையில் விழுந்தாலும் நாங்கள் சந்தனத்தைத்தான் தேடுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் முட்டாள்களாக இல்லை. வேண்டுமானால் வரட்டுத்தனத்துடன் பவனிவரும் அப்பாவிகளும், சுயநலவாதிகளும், எரியும் வீட்டில் எதையும் சுருட்டலாம் என்ற எண்ணம் கொண்டவர்களும் இனி உங்களுடன் உடன் வருவார்கள்.

மஇகாவும் – நம்பிக்கையும்

indians56 வருடங்களாக இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையை அம்னோவால் தீர்க்க இயலவில்லை. நஜிப்பின் அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தட்டுத்தள்ளாடி கடந்த வருட இறுதிவரையில் 6,590 இந்தியர்களின் பிரச்சனையைத்  தீர்த்துள்ளதாக ‘நம்பிக்கை’ இணையத்தளம் பெருமை பட்டுக்கொள்கிறது. இப்பணிக்குப்  பணம் தேவையில்லை, அரசியல் ஆளுமைதான் வேண்டும். அதைக்கொண்டிருந்த அம்னோவும் அதன் தலைவர் நஜிப்பும் எதனால் இதைச் செய்யவில்லை? வேதமூர்த்தியுடன் ஓட்டு சேர்க்க காத்திருந்தாரா? நாம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் நஜிப்பை வெல்ல வைத்தால்தான் செய்வாராம்.

2009ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக நஜிப் ஓர் அமைசரவை செயல்குழுவை அமைத்தார். அதில் ம இ கா பரிந்துரை செய்த சுமார் 50-க்கும் மேலான அனைத்து திட்டங்களையும் நஜிப் ஏற்றுக்கொண்டார். அதற்கு தலைமையாக அமைச்சர் மருத்துவர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். இதன் செயலாக்கத்தில் சுணக்கம் ஏற்பட்ட்தால், 2010 இல் இக்குழு மறுவடிவம் பெற்று SITF என்ற விசேச செயலாக்க பிரிவானது. இதற்கு இணைத்தலைவர்கள் சுப்பிரமணியமும் ஞானலிங்கமும் ஆவர். இதுவும் தடுமாற பழனிவேலுவின் தலைமையில் கொள்கை செயலாக்க பிரிவு அமைக்கப்பட்டது. தற்போது இதோடு முனைவர் இராஜேந்திரன் கல்வி பிரிவும் நஜிப்புடன் நேரிடை தொடர்பு கொண்ட அமைப்பாகும்.

இதில் உள்ள சுணக்கமும் செயலாக்க மலட்டுதன்மைக்கு மஇகா-வும் காரணம் என்றாலும், பெரிய முட்டுக்கட்டை அம்னோ அரசாங்கத்தின் இனவாத அமைப்பு முறையாகும். இதை அறியாது தெரியாது என்று மறுப்பவர் கிடையாது. எனவே ஹிண்ட்ராப் கொண்டுவரும் திட்டங்கள் எதுவும் புதிதானவை அல்ல. அடிப்படையை ம இ கா வலியுறுத்தியது ஆனால் ஹிண்ட்ராப் அதை அதிகமாக கோரியுள்ளது.

இரு கட்சி ஆட்சி முறை

அமைச்சரவை ஏற்றுக்கொண்ட அடிப்படையை கூட செய்ய வக்கற்ற நிலைமைக்கு காரணம் இனவாத ஊறிப்போன அரசாங்கம் அமைப்பு முறையாகும். அதனால்தான் அரசாங்கத்தை மாற்றுவோம் என்பது சாமான்ய மக்களின் குரலாக ஒலிக்கிறது.

மக்கள் கூட்டணி இலவச கல்வி என்கிறார்கள், ஹிண்ட்ராப் இந்தியர்களுக்கு 30 விழுக்காடு கல்விக் கடனுதவியை அதிகரிக்க கோரும் திட்டம் ஏற்புடையதா?  இது என்ன முட்டாள்தனம்?

தேசிய முன்னணியாகட்டும், மக்கள் கூட்டணியாகட்டும் – உரிமை போராட்டம் என்பது காலவரையற்றது. அதை யாராலும் பறித்துவிட முடியாது.

இந்த வேதமூர்த்தி – நஜிப் ஒப்பந்தத்தில், நவம்பர் 25 ஹிண்ராப்ட் போராட்டத்தில் கலந்து கொள்ளாத, உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் கைதாகாமல் தப்பி சென்ற வேதமூர்த்தி, ஏழை இந்திய வாக்காளர்களைக்  இறுதி  நேரத்தில் பணயம் வைக்கும் வகையில் நடந்து கொண்டது ஏமாற்றத்தை அளிக்கிறது.

இராமர் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால்  என்ன? என்று கூறும் இவர்களின் அரசியல் ஆயுதமும் பிரம்மாஸ்திவாரமும் இந்த நஜிப்பின் ஒப்பந்தம் என்றால், இவர்களுக்குப் பொருந்தும் வேடம் சகுனியாகும்.

என்னைப்போல் பலருக்கும் இதுபோன்ற ஆதங்கமும் ஒருவகையான அருவருப்பும் உருவாக காரணம் நாம் இவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கைதான்.

தேர்தலுக்குப்  பிறகு பாரிசான் மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வென்றால் நீங்கள் செய்த ஒப்பந்தத்தைச்  செயல்படுத்த   இனவாத அரசியல் அமைப்பு முறை இடம் தராது.  அரசியல் பலம் முன்னே ஹிண்ட்ராப், கைக்கூலிகள் போல  கைக்கட்டிதான் நிற்க வேண்டும். காலம்காலமாக இந்திய பிரதிநிதிகள் எண்ணிலடங்கா  அளவில் கைக்கட்டி விசுவாசத்துடன் கால்கடுக்க காத்துக்கிடப்பதைத்தான் வழிமுறையாக்கியுள்ளனர்.

உடனே, நீங்கள் போராட்டம் நடத்துவீர்களா? அல்லது தனேந்திரன் போல், இன்னோர்  இத்யாதியாக பணப்பட்டுவாடா செய்வீர்களா? இதில் நீங்கள் போராட முற்பட்டால் யார் உங்களுடன் வருவார்கள் – அல்லது பின்னால் வருவார்கள்? மாற்றத்திற்குப்  போராட துணிந்த மக்களைப்  புறக்கணித்த உங்களை மதிக்க மக்கள் முன்வரமாட்டார்கள்.

இறுதியாக, இந்த தேர்தலில் பாரிசான் மீண்டும் வென்றால். மலேசியர்களுக்கு இரு கட்சி ஆட்சி உருவாக கிடைத்த பொன்னான தருணத்தைக் கெடுத்த பாவிகள் என்றும் சோரம் போனவர்கள் என்றும் ஹிண்ட்ராப்பை நான் சாடத்தேவையிலை, அதை வரலாறு செய்யட்டும்.