செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி

chengalpattu_spl_campசெங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை பெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் சசிதரன் (21) என்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, செங்கல்பட்டு முகாமிலுள்ள மூன்றுபேர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 11 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை அகதிகளில், போராளி இயக்கத்தில் இருந்தவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வருபவர்கள் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என சிலரும் சென்னையை ஒட்டிய பூவிருந்தவல்லி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாதுகாப்புடன் கூடிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு முகாம்களிலும் சுமார் 46 பேர் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி அடைக்கப்பட்டிருப்பவர்கள் தங்களை விடுவிக்ககோரி அடிக்கடி போராட்டம் நடத்திவந்துள்ளனர். தங்கள் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தங்களை இந்த முகாம்களிலிருந்து விடுவித்து வழமையான அகதிமுகாம்களில் இருக்கும் தத்தம் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிவருகின்றனர்.

போலீசாரோ, இவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படவேண்டியவர்கள் என்றும் இவர்களை இந்த உயர்பாதுகாப்பு முகாம்களை விட்டு வெளியில் விடமுடியாது என்றும் வாதாடி வருகின்றனர்.

பல்வேறு போராட்டங்களின் விளைவாக, சில அகதிகள் சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுமுள்ளனர், ஆனால் மேலும் பலர் அங்கே அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே சசிதரன் என்பவர் இன்று ஞாயிறு காலை நஞ்சருந்தியிருக்கிறார். தனது கோரிக்கைகள் ஏற்கப்படாததால் வேறு வழியின்றியும் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக சசிதரன் கடிதம் எழுதி வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TAGS: