திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைக்கு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திருநங்கை குணவதி (வயது 23). இவர் எம்.ஏ.(ஆங்கிலம்) முதுகலை பட்டப் படிப்பு மற்றும் கணிப் பொறி ஆசிரியர் பயிற்சி படித்துள்ளார். முதுகலை பட்டம் பெற்று இருந்தாலும், குணவதி திருநங்கையாக இருந்ததால் பல நிறுவனங்களில் வேலை தர மறுத்தனர். எனவே தனக்கு அரசு பணி வழங்கவேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டு முதல் அவர் மனு கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வேலை கேட்டு திருநங்கை குணவதி மனு ஒன்றை கலெக்டர் வெங்கடாசலத்திடம் கொடுத்தார்.
அந்த மனுவை பரிசீலனை செய்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனருக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி அந்த மனுவை ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து திருநங்கை குணவதிக்கு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தைகள், சிசு பராமரிப்பு மையத்தில் காவலாளி பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிநியமன ஆணையை திருநங்கை குணவதியிடம் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி வழங்கினார்.