போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்

seemanகடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டமாக நடத்திப் பேசினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பத்து மணிக்குள் பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் வலியுறுத்தியிருந்தனர். அதற்கு முன்னமே 9 மணி துவங்கி, 9.30 வரை இரு முறை கூட்டத்தை முடிக்கச் சொல்லி போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் 9.40 வரை நிர்வாகிகளே பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் சீமான் பேசினார். அப்போது மணி 10ஐக் கடந்துவிட்டது. எனவே போலீஸார் 10 மணிக்கும் 10.10க்கு ம் 10.15க்கும் என மூன்று முறை மண்டபத்துக்குள் நுழையப் பார்த்தனர். அவர்களை நாம் தமிழர் கட்சித்  தொண்டர்கள் வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் 10.20 மணி அளவில் போலீஸார் ஒட்டுமொத்தமாக மண்டபத்துக்குள் நுழைந்து மேடைப் பக்கம் சென்றனர். ஆனால், மேடையில் அதுவரை பேசிக்கொண்டிருந்த சீமான், போலீஸார் வந்த நொடிப் பொழுதில், பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு விறுவிறுவென பக்கவாட்டுக் கதவு வழியே வெளியேறி, வேகமாக காரில் ஏறிப் பறந்துவிட்டார். அவரை மண்டபத்தில் இருந்த தொண்டர்களும் போலீஸாரும் தேடினர்.

இதுவரை அவர் மீது வழக்குகள் எதுவும்  பதிவு செய்யப்படவில்லை என்பதால் உடனடி கைது எதுவும் செய்யவில்லை.

TAGS: