இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் : தமிழக முதல்வர்

jayaஇலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா-இலங்கை இடையே, கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவானது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்து அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த்துறையும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்க காரணமான ஒப்பந்தங்களை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்கக்கோரியும், 2008ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி, சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என அப்போது கூறினார். காவிரி விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் மூலம் பெற்ற வெற்றியைப்போல், கச்சத்தீவு பிரச்னையில் வெற்றி பெறுவோம் என முதல்வர் சட்டசபையில் பேசினார். மேலும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தின் பாரம்பரிய பகுதியான கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு மற்றும் சுற்றுப்பகுதிகளை இந்தியா தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்டபிறகு சர்வதேச கட்சார் எல்லைக்கோடு பகுதியை மீண்டும் வரையறை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் முதல்வர் தனது கடிதத்துடன், கச்சத்தீவு தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் இணைத்துள்ளார்.

TAGS: