சம்பாதிப்பது கணவனின் கடமை : மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு

gavel_justice_court_lawசம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,” என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார்.

மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்கின்றனர். கடந்த, 2012ம் ஆண்டில், தனக்கு மாதம், 1,500 ரூபாயும், தன், 1 வயது குழந்தைக்கு, மாதம் தோறும், 1,000 ரூபாயும், பராமரிப்பு செலவாக வழங்க, கணவருக்கு உத்தரவிட வேண்டும் என, குடும்ப நல கோர்ட்டில், சசி வழக்கு தொடர்ந்தார். அதைக் கேட்ட கோர்ட், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க, மகேஷுக்கு உத்தரவிட்டது.

“குழந்தை சிறு குழந்தையாக இருப்பதால், அதிகம் சாப்பிடாது. எனவே, அதற்காக தனி பராமரிப்பு செலவு கொடுக்கத் தேவையில்லை” என, குடும்ப நல கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அந்தப் பெண், மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு, பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதிபதி, எம்.எல்.தகிலியானி முன், விசாரணைக்கு வந்தது. “மகேஷ் வேலையில்லாமல் இருப்பதால், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். இதில், கூடுதலாக, 1,000 ரூபாய் கேட்பது நியாயமல்ல” என, அவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிபதி தகிலியானி, தன் உத்தரவில், நேற்று கூறியதாவது: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான் கணவரின் கடமை. சம்பாதிக்காமல் இருப்பதும், வேலையில்லாமல் இருப்பதும், மனைவியின் குற்றமல்ல; கணவனின் குற்றம். இதற்காக, தகுந்த வேலை பார்ப்பது, கணவனின் பொறுப்பு. அதை, மகேஷ் செய்யத் தவறிவிட்டார்

எனவே, குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டபடி, சசிக்கு, மாதம், 1,500 ரூபாயும், அவர்களின் குழந்தைக்கு, மாதம், 1,000 ரூபாயும் பராமரிப்பு செலவாக கொடுக்க வேண்டும். இந்தத் தொகையை, 2012ம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தன் உத்தரவில் கூறியிருந்தார்.

TAGS: