தமிழும் சீனமும் அழியத்தான் வேண்டுமா?

chinese and indian education in malaysiaதமிழ் சீனப் பள்ளிகளை அகற்றி , அங்கு தேசிய மொழியாகிய மலாய் மொழி போதிக்கப் படுமேயானால் , இன ஒற்றுமை மலேசியாவில் ஓங்கும் என்ற அர்த்தத்தில் Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல்  ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதைப்பற்றி எண்ணிலடங்கா எதிர்ப்புக்கள் நிறையவே வந்துவிட்டன. குறிப்பாக  தமிழ்ப் பள்ளிகள் அழியக்கூடாது என்பதில் தமிழர்கள் மிகவும் உறுதியுடன் இருக்கின்றார்கள் என்பதற்கான கருத்துக்கள் அதிகமாகவே சொல்லப்பட்டுவிட்டன. இவர் இனங்களிடையே ஒற்றுமை இல்லை என்று எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை.

1969 ல் நடந்த இனக்கலவரங் கூட அரசியல் காரணங்களுக்காக அரங்கேற்றப்பட்டது என்று இப்பொழுது தெரியவரும் வேளையில், இயல்பு வாழ்க்கையில் மலேசியாவில் உள்ள  மூன்று பெரிய இனங்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அராசங்கம் மலாய்க்காரர்களுக்கு மட்டும் கொடுக்கும் மிதமான சலுகைகளால் மற்ற இன மக்கள் அராசங்கத்தின் மீது ஆத்திரங் கொண்டிருக்கின்றார்களே தவிர அதைக் காரணங்காட்டி மலாய்க்காரர்களுடன் சண்டையிட யாரும் முற்பட்டதில்லை. இந்த காரணங்களுக்காவே கடந்த தேர்தலில் ஆளும் கட்சி மொத்த ஓட்டு எண்ணிக்கயில் எதிர்கட்சிகளை விட  குறைவான எண்ணிக்கையே பெற்றது. மக்கள் ஒற்றுமையை ஒரு பிரமிட்டை  உதாரணமாக ஒப்பிட்டு பார்க்கலாம். பிரமிட்டின் அடித்தளம் அகன்றதாகவும் வலுவாகவும் இருக்கும் . அதுவே  மேலே போகப் போகக் குறுகி சுறுங்கி கூறான வடிவத்தில் சென்று முடியும்.

All for 1, one for allமலேசிய மக்கள் மலாய்க்காரர்கள் , சீனர்கள் தமிழர்கள் , மற்ற இனத்தினர் என்று பல கலாச்சார, மொழி மதங்கள், நம்பிக்கைகள் அடிப்படையில் பிரமிட்டின் அடிதளம் போல் இந்நாட்டில் கடந்த 200 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனவரும் எப்படி ஒற்றுமையாக இவ்வளவு காலம் எப்படி வாழ்ந்து வந்தார்கள் ?

அவரவருக்கு ஏற்ற தொழிலை செய்துகொண்டும் , அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப  மதங்களை பின்பற்றியும்  . யாவரும் விட்டுக் கொடுத்தும் ஒருவர் வம்புக்கு ஒருவர் போகாமலும் இது காறும் வாழ்ந்து வந்ததானால் இந்த ஒற்றுமைக்கு காரணம் என்று கூறலாம். மலாய்க்காரர்கள் அவர்கள் பள்ளிகளுக்கும் , சீனர்கள் சீனப் பள்ளிகளுக்கும் , தமிழர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கும் அவரவர்கள்  பிள்ளைகளை அனுப்பி அங்கு அவரவர் தாய் மொழியிலேயே அடிப்படை கல்வியினை பயிற்றுவிட்டனர். சிலர் பெற்றோர்கள் அப்பொழுதிருந்த ஆங்கில ஆரம்பப் பள்ளிகளுக்கு அனுப்பியும் வைத்தார்கள்.

இம்மூவின மாணவர்களும் இடைநிலைப்பள்ளிக்கு செல்லும் பொழுது அங்கு யாவரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே மொழியான ஆங்கிலத்தைக் கற்று 5 அல்லது 6 வருடங்கள் பயின்று பின்பு வேலைக்கோ அல்லது மேற்கல்வி பயிலச் சென்றனர். மேல் கல்வி பயிலச் சென்ற மாணவர்களும் ஒரே பல்கலைக்கழகத்தில் , அனைவரும் சமமாகவே தங்கள் பட்டப் படிப்பை படித்தனர். வேலைக்கு போகும்போது , அரசாங்க உத்தியோகமோ, அல்லது தனியார் துறைகளிலோ ,எல்லா இனத்தச் சேர்ந்தவர்களும் அவரவர் திறமைக்கேற்ப பணிகளில் சேர்ந்தனர். இது 1969 முன்பு இருந்த கதை.

பிரமிட்டை உதாரணமாகக் கொண்டால், அடியில் பரந்து விரிந்து இருந்த மூவின மாணவரும் இடைநிலைப் பள்ளிகளில் இணவதன் மூலம் ஒன்று சேர்ந்து பிரமிட்டப் போல குறுகி செங்குத்தாகப்  போகப் போக , பல்கலைக் கழகம் வேலை இடம் என்று  குறுகிக் கொண்டே போய் இறுதியில் பிரமிட்டின் உச்சிக்கே போய் நாம் எல்லோரும் மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒரே புள்ளியில் சங்கமமானார்கள்.

education in malaysia1969 ற்கு பிறகு உள்ள நிலைமை வேறாகிப் போயிற்று. முன்பு போன்று மூன்று மொழிப்பள்ளிகள் இன்று கூட இருந்தாலும் , சிறப்புச் சலுகை  என்ற பெயரில் மலாய்ப் பள்ளியில் பயிலும் நன்கு தேர்ச்சி பெற்ற  மலாய் முஸ்லிம் மணவர்களை முதலில் யுபிஎஸ்ஆர் தேர்வின் முடிவில் தங்கும் விடுதிகளைக் கொண்ட இடைநிலப்பள்ளிகளில் சேர்க்கின்றார்கள். பிறகு, இஸ்லாமியப் கல்லுரி, மாரா கல்லூரி, மார தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், இசுலாமியப் பல்கலைக்கழகம் என்று ஓர் இன ஓர் மத மாணவர்கள் மட்டுமே அனுமதி பெறும் இடங்களில் சேர்க்கப் படுகிறார்கள்.

இது போன்ற கல்விக்கூடங்களில் இருந்து வரும் பட்டதாரிகள் எப்படி மற்ற இனத்தாரும் இணந்தது, வேலை இடத்திலும் சரி  பொது இடத்திலும் சரி சமமாக ஒரே மலேசியன் என்ற எண்ணத்தோடும் சகோதரத்தன்மையோடும் பழக முடியும். அவர்கள் ஒரே இனம் மதம் என்ற அடிப்படையில் அத்தனை ஆண்டுகள் கல்விக்குப் பிறகு, அவர்களால் சீன இந்தியர்களூடன் இவர்களெள்ளாம் நமது மலேசியியர்கள் என்ற உணர்வுடம் எப்படிப் பழக முடியும், இதற்கு காரணம் முழுக்க முழுக்க அரசாங்கம் கடைப் பிடித்துவரும் இனவாதக் கொள்கைகளே அன்றி மலாய்க்காரர்கள் அல்ல.

இந்த சூழ்நிலையில் பயின்ற மாணவர்கள் மத்தியில் இன ஒற்றுமை எழ வாய்ப்பில்லை, அதே சீன இந்திய மாணவர்களோ, குறைந்த எண்ணிக்கையிலான மலாய் மாணவர்களுடன், அதுவும் நடுத்தர தகுதியைக் கொண்டவர்களுடன் ஆறாம் படிவம் வரை பயில வேண்டும், பிறகு பொது பல்கலைகழகங்களுக்கு, முன்பு பிரிந்து போன மாலாய் மாணவர்களுடன் போட்டி போட்டு இடம் பிடிக்க வேண்டும்.

simpang-lima-tamil-schoolஏற்கனவே மலாய்க்காரர்களுக்கு என்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மேற்கல்விக் கூடங்கள் இருந்தும் கூட, பொது கல்விக்கூடங்களில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு மிஞ்சிய இடங்களைத்தான் சீனர்களும் இந்தியர்களும் பெறுகிறார்கள். இந்த நிலையில் சீன தமிழ்ப் பள்ளிகள் ஒழிக்கப்பட்டு ஒரே மொழியில் ஒரே பள்ளியில் எல்லா இன மாணவர்களும் பயில வேண்டும் என்று சொல்வது  எப்படி ஒற்றுமைய் வளர்க்கும்.

இவர்கள் செய்வது பிரமிட்டை தலைகீழாக கவிழ்த்து நிற்க வைப்பதற்கு சமம். கீழ் நிலையில் எல்லா மாணவர்களையும் ஒன்று சேர்த்து விட்டு, ஒரே மொழியில் பயில வைத்துவிட்டு , பின்பு இவர்களை இனம் பார்த்துப்  பிரித்து  அனுப்பிவிட்டால் பிறகு இம்மாணவ்ர்கள் பிரிந்து போய் தலைகீழ் பிரமிடுகள் போல் தான் இருப்பார்கள். எப்படி தலைகீழ் கவிழ்த்த பிரமீடு நிலையாக நில்லாதோ அதே போன்று தான்  இந்த ஆரம்பக் கல்வியில் தாய் மொழி கல்வியை ஒழித்து எல்ல மாணவர்களையும் ஒரே மொழியில் பயிலுவிக்கும் செயலும். இவர்களின் உள்நோக்கம் ஒற்றுமை அல்ல மாறாக மலாய் மொழியின் ஆதிக்கத்தையும் இன ஆதிக்கத்தையும்  மேலோங்கச் செய்து மற்ற மொழிகளை அழிக்க முயலுவதே ஆகும்.

உண்மையிலேயே மாணவர்களின்  ஒற்றுமை இவர்களுக்கு முக்கியமென்றால் , இனம் பார்த்து பிரிக்கும் செயலை நிறுத்தி , தகுதி அடிப்படையின் பேரில் மாணவர்களைத் தேர்வு செய்து , பல்கலைக் கழகம் வரை அவர்கள் செல்ல வழி  வகுக்க வேண்டும். வெறும் மலாய்க் காரர்களே பயிலும் இது பொன்ற இடங்களில் , மற்ற இனங்களை அண்ட விடாமல் செய்தால்  எப்படி தேசிய ஒற்றுமையை வளர்ப்பது?

Education DG and ex-top judgeதேச ஒற்றுமை ஓங்க, முதலில் வெறும் மலாய் மாணவர்களே பயிலும் கல்விக்கூடங்களில் மூன்று இன மாணவர்களும் பயில வழி காண வேண்டும்.குறிப்பாக மாரா தொழில் நுட்பக் கல்லூரியில் மலாய்க்காரல்லாத மாணவர்கள் இடம் பெறச் செய்ய வேண்டும்.

தாய்மொழிக் கல்வியை இந்த நாட்டில் ஒழிக்க வேண்டும் என்று கூறும் இது போன்ற கல்விமான்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். இவர்களின் ஓரின கல்வி பின்புலம் தான் இவர்களை இப்படிப் பேச வைக்கிறது . இவர்களின் மிதமான கல்வி தகுதியும் , சிறப்பு சலுகைகளினால் வந்த பதவியும் இவர்களை இப்படி பேச வைக்கிறது. இவர்களும் மற்ற இனமான மாணவர்களைப் போல் போட்டிக் கிடையிலும் தகுதியின் அடிப்படையிலும் தங்களில் பதவிகளைப் பெற்றிருப்பார்களேயானால் இது போன்ற குந்தகம் விளைவிக்கும் பேச்சுக்களை இவர்கள்  பேசியிருக்க மாட்டார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை, மலேசியா உண்மையான ஆசியா என்றெல்லாம் பல்லு பாடும் இவர்கள் , இந்த அடிப்படை வேற்றுமைகளில் இருந்து ஒற்றுமையைக் காணத்தவறினால் மேற் கூறிப்பிட்ட சுலோகங்களுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

ஆகவே ஒழிக்கப்படவேண்டியது தாய் மொழிப் பள்ளிகள் அல்ல , இவர் போன்ற தீய எண்ணம் கொண்ட கல்விமான்களைத்தான் .அரசாங்கம் இனபாகுபாடின்றி , தேவைக்கேற்ப சலுகளையும் , கல்வியில் சமவாய்ப்புகளும் வழங்குமேயானால் , மலேசியா ஒரு தலை சிறந்த  நாடாக இந்த உலகில் பவனி வரும் என்பது திண்ணம்.

-முனைவர் முனியாண்டி நரசிம்மன்