சத்தீஸ்கர் தாக்குதலுக்கு மாவோயிஸ் போராளிகள் பொறுப்பேற்பு

maoist_naxal_attack_india_chhattisgarhசத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டகாரண்ய காடுகளில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். மக்கள் விரோத கொள்கைகளை கொண்டு வந்த காங்கிரஸ் தலைவர்களை இந்த தாக்குதல் மூலம் தாம் தண்டித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

மாவோயிஸ்டுகள் நடத்திய சமீபத்திய தாக்குதலில் சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சித் தலைவர் நந்த குமார் பாடில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திர கர்மா உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி சி சுக்லா உள்ளிட்ட 36 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நக்சல்களை ஒடுக்க சல்வா ஜூதூம் என்ற ஒரு படையை அமைத்தவர் மகேந்திர கர்மா. இந்த படைக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளின் அனுசரணை பல ஆண்டுகளாக கிடைத்து வந்தது. சமீபத்தில் தான் இந்த படை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சல்வா ஜதூம் அமைப்பை கலைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சல்வா ஜூதூம் அமைப்பினர் பழங்குடியின மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதற்காகவும், பெண்களை வன்புணர்ச்சி செய்தமைக்காகவும் மகேந்திர கர்மாவை தாம் தண்டித்துள்ளதாக மாவோஸ்டுகளின் தண்டகாரண்ய மண்டல குழுவின் பேச்சாளர் குட்சா உசேந்தி பிபிசிக்கு ஒலி பதிவு செய்து அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாசிஸ்ட் மகேந்திர கர்மாவின் குழுவினரால் பஸ்தர் பகுதியில் உள்ள பழங்குடியினர் கொல்லப்பட்டது, அவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது, பாலியல் வன்புணர்வுக்கு பெண்கள் உட்படுத்தப்பட்டது, மக்கள் மனிதத் தன்மையற்று நடத்தப்பட்டது போன்றவைக்கான இயற்கையான எதிர் வினைதான் அவரின் கொலை. தற்போது முன்னெடுக்கப்படும் பசுமை வேட்டைக்கு எதிர் நடவடிக்கையாகவே மற்ற காங்கிரஸ் தலைவர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர். நந்த குமார் படேல் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த போதுதான் துணை இராணுவப் படையினர் பஸ்தர் பகுதியில் நக்சல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனால் அவர் கொல்லப்பட்டார். வி சி சுக்லா மத்திய அமைச்சராக இருந்த போது அவர் மக்களுக்கு விரோதமாக முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்தவர்,” என்று நக்சல்கள் கூறியுள்ளனர்.

அதே நேரம் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் வண்டிகளின் ஒட்டுனர்கள் மற்றும் கீழ் மட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அப்பாவிகள் கொல்லப்பட்டமைக்காக தாம் வருந்துவதாகவும் நக்சல்கள் கூறியுள்ளனர்.

நக்சல்களுக்கு எதிரான பசுமை வேட்டை நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் சத்தீஸ்கர் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் சிறையில் இருக்கும் அப்பாவி பழங்குடியினர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் வளங்களை சூறையாட வழிவகுக்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட வேணடும் என்றும் நக்சல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் கூட்டு சேர்ந்து சல்வ ஜூதூமை ஆதரித்ததாகவும் – பழங்குடியினரின் சொத்துக்களை சூறையாடவும் – பெரு நிறுவனங்களுக்கு நிலங்களை கையகப் படுத்தவுமே அது பயன்பட்டதாகவும் நக்சல்கள் கூறியுள்ளனர்.

சல்வா ஜூதுமால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் இந்த பழிவாங்கும் தாக்குதலை தாம் நடத்தியுள்ளதாகவும் நக்சல்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்தியாவில் நக்சல்கள் இயக்கத்தால் 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு சமீபத்தில் தெரிவித்துள்ளது. இவர்களின் செயல்பாடு சத்தீஸ்கர் மற்றும் ஒரிசாவில் சமீப காலமாக அதிக அளவில் இருக்கிறது. நக்சல்களின் கோரிக்கைகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதார உரிமைகள், நில உரிமை போன்றவை இருக்கின்றன. பழங்குடியினர்களின் மத்தியில் செயல்படும் இவர்களுக்கு அந்த சமூகத்தின் ஆதரவும் ஒரளவு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நக்சல்கள் தான் மிகப் பெரும் அச்சறுத்தல் என்று பிரதமர் மன் மோகன் சிங் பல முறை கூறியுள்ளார். நக்சல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கருத்து காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளில் ஒரு சாராரிடம் காணப்படுகிறது. ஆனால் கடும் நடவடிக்கைகள் நிலமையை இன்னமும் மோசமாக்கும் – நக்சல்கள் முன் வைக்கும் நிலப் பறிப்பு, பெரு நிறுவனங்களுக்காக பழங்குடி மக்களை அகற்றுவது போன்ற விடயங்களை நியாயமாக அரசு தீர்க்க வேண்டும் என்று அறிவு ஜீவுகள் வாதிடுகின்றனர்.

இந்நிலையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான கடும் படை நடவடிக்கைகளை எடுப்பதை எதிர்த்து வந்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மாவோயிஸ்டுகளை சிவில் சமூகத்தினர் போற்றிப் புகழ்வதை தவிர்க்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.

நக்சல்கள் சிறார்களைப் படைகளில் சேர்ப்பதும், பாதுகாப்புப் படைகளுக்கு உதவியவர்கள் என்று தம்மால் சந்தேகிக்கப்படுபவர்களை கொடுரமாக தாக்கிக் கொன்ற நிகழ்வுகளும் பல முறை நடந்துள்ளன.

-BBC

TAGS: