“கச்சத்தீவை, இலங்கை அரசிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும்” என, முதல்வர் ஜெயலலிதா, அறைகூவல் விடுத்த அன்றே, ராமேஸ்வரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது.
ராமேஸ்வரம் மீனவர்கள், 24 பேர், நேற்று முன்தினம், கடலுக்கு சென்றனர். பிற்பகல், 12:00 மணிக்கு, இவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், நேற்று காலை, மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜூன், 20ம் தேதி வரை, அனுராதபுரம் சிறையில் அடைக்க, கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, 7 மணிக்கு, இந்திய – இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த 25 மீனவர்களை கைது செய்து, நான்கு படகுகளையும் பறிமுதல் செய்தனர்; இதில், ஒரு படகு நடுக்கடலில் மூழ்கியது. மீனவர்களை, நேற்று காலை, கெய்ட்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஜூன், 19ம் தேதி வரை, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க, கெய்ட்ஸ் கோர்ட் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள, இந்திய துணை தூதரக அதிகாரிகள், மீனவர்களை சந்தித்து பிஸ்கட், பிரட் கொடுத்து, “விடுதலை செய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என, ஆறுதல் கூறியதாக, ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.