சென்னை: முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:அமெரிக்க டாலருக்கு எதிரான, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அதையே காரணம் காட்டி, மாதத்திற்கு, இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வாடிக்கையாக உயர்த்தி வருகின்றனர்.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அல்லல்படுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக, தொடர்ந்து, ஆறாவது வாரமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போதைய பெட்ரோல் விலை உயர்வை நிச்சயம் தடுத்தியிருக்கலாம். இதன் மூலம் நாட்டின் பொருளாதாமும் ஓரளவு வளர்ச்சியுற வழிவகை ஏற்பட்டிருக்கும்.
உள்நாட்டு எண்ணெய் மற்றும் காஸ் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், எண்ணெய் வளமும், எரிவாயு வளமும் நிறைந்துள்ள நம் நாட்டில் புதிய துரப்பன பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்யாமல், எண்ணெய் இறக்குமதியை குறைக்கக் கூடாது என, எண்ணெய் இறக்குமதி ஆதரவுக் குழு, பெட்ரோலிய அமைச்சர்களை மிரட்டுவதாக, பெட்ரோலியத் துறை அமைச்சரே கூறுவது நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ளது. பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், “மீண்டும், மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதால், விலைவாசி மேலும் அதிகரித்து, மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுததும்’ என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தன் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.