இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்

Isro-logoபெங்களூரு : இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜலஹல்லி அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில் ஜூன் 20 அல்லது 21 ஆகிய தேதிகளில் இஸ்ரோ மீது தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜலஹல்லி அலுவலக வாசலில் கண்டுபிடிக்கப்பட்ட அக்கடிதம் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் இஸ்ரோ மட்டுமின்றி இந்துஸ்தான் ஏ‌ரோனாடிக்ஸ் லிமிடெட்(ஹல்) மற்றும் தேசிய விண்வெளி ஆய்வகங்கள்(நல்) உள்ளிட்ட இடங்களையும், சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சிவன் கோயில்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்போகும் இடங்களும் அக்கடிதத்தில் பட்டியலி‌டப்பட்டிருக்கிறது. இஸ்ரோவில் உள்ள சில அதிருப்தி குழுக்களே இது போன்ற கடிதத்தை பரப்பி பீதி ஏற்படுத்துவதாக போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது.

மிரட்டல் கடிதம் குறித்து தெரிவித்த கர்நாடக சட்ட ஒழுங்கு பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷ்னர் கமல் பன்ட் கூறுகையில், இது சில விஷமிகள் விளையாட்டாக எழுதிய கடிதம் போல் தெரிகிறது; இருப்பினும் போலீசார் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள போவதில்லை; எங்களின் கடமையை திறம்பட செய்வோம்; இக்கடிதத்தை யார் எழுதியது என கண்டுபிடிக்கப்படும்; இந்த கடிதத்தின் நகல்கள் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி உள்ளனர்; இஸ்ரோ உயர்மட்ட பாதுகாப்பு நிறைந்த இடம்; ஆதலால் அதற்கு கடுமையான பாதுகாப்பு தேவைப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய்நகரில் உள்ள இஸ்ரோ தலைமையகம், பீன்யாவில் உள்ள இஸ்ரோ தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு மையம், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் அருகே உள்ள பயணிகள் விடுதி, பயாலாலு மையம், ஹசனில் உள்ள பாதுகாப்பு கட்டுப்பாட்டு தலைமையகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை மூலம் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக இஸ்ரோ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக ஹசன் எஸ்.பி., அமர் சிங் தெரிவித்துள்ளார்.

TAGS: