மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக,இ.கம்யூ,திமுக வெற்றி

india28613aதமிழகத்தின் சட்டப்பேரவையிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தல்களில், எதிர்பார்த்தபடியே, ஆளும் அதிமுகவின் நான்கு வேட்பாளர்களும், அதன் ஆதரவு பெற்ற ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், திமுகவின் வேட்பாளர் கனிமொழியும் வெற்றி பெற்றுள்ளனர்.

அ இஅதிமுகவின் மைத்ரேயன், அர்ஜூனன், ரத்தினவேல் ஆகியோர் தலா 36 வாக்குகளும், அக்கட்சியின் லட்சுமணன் 35 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்டின் டி.ராஜா 34 வாக்குகள் பெற்றார்.

திமுகவின் கனிமொழி 31 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

தேமுதிகவின் இளங்கோவன் 22 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

ஒரு வாக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அது கனிமொழிக்கு சென்றிருக்கவேண்டியது.

வெற்றி பெற்ற நான்கு அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுடன் ஜெயலலிதா

திமுகவின் 23 உறுப்பினர்கள், காங்கிரசின் ஐந்து, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகியவற்றின் தலா இரண்டு என கனிமொழிக்கு 32 வாக்குகள் கிடைத்திருக்கவேண்டும் .

ஆனால் 31தான் கிடைத்திருக்கிறது, ஆக அவரை ஆதரித்திருக்கவேண்டிய யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் செல்லாத வாக்களித்திருக்கிறார் என்கின்றனர் நோக்கர்கள்.

ஆனால் அவர் யார் என்பது அடையாளப்படுத்தப்படவில்லை.

மற்றபடி அதிருப்தியாளர் எழுவரைத் தவிர தேமுதிகவின் 22 பேரும் அக்கட்சி வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றனர் என்பது அக்கட்சித் தலைமைக்கு சற்று ஆறுதலான செய்தியாகும்

வாக்களித்த பின், திமுக தலைவர் கருணாநிதி

முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழோசைக்கு கருத்து தெரிவித்த டி.ராஜா , தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பாரதூர மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும், கனிமொழி வெற்றி பெற்றிருந்தும் காங்கிரஸ் ஆதரவிலேயே அவர் வெற்றியடைந்திருப்பதால் திமுகவின் சந்தர்ப்பவாதப்போக்கு அம்பலமாகியிருப்பதாகவும் குறை கூறினார்.

அ இஅதிமுகவிற்கும் இடதுசாரிக் கட்சிகளுக்குமிடையே உறவு பலப்படும் என்றவரிடம் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தேர்தல்களுக்குப் பிறகு அ இஅதிமுக பாரதீய ஜனதாவை ஆதரிக்காது என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா எனக்கேட்டபோது, ராஜா பதிலளிக்க மறுத்துவிட்டார். BBC

TAGS: