இலங்கை தமிழர்களுக்கான பணி தொடரும்: முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் உறுதி

manmohan-singhசென்னை: “இலங்கைத் தமிழர்களுக்கு, தன்னாட்சி உரிமை அளிக்கும் வரை, நமது பணி தொடரும்’ என, முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம், 14ம் தேதி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், “இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின், 13வது திருத்தத்தை, எந்த வகையிலும் ரத்து செய்வதற்கு அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்கு, இலங்கை அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, மத்திய அரசு, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “தமிழர்கள் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாமல், அவர்களின் ஜனநாயக உரிமை பகிர்ந்தளிக்கப்படுவதை, உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது, இலங்கைத் தமிழர், சட்ட ரீதியான உரிமைகளை பெற்றிருப்பதாகக் கருத இயலும்.

இலங்கையில், சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக காட்டப்படும், வேறுபாடுகளையும், அவர்களுடைய நீண்ட நாள் குறைபாடுகளையும் களைந்து, அவர்களுக்கு ஆதரவாக, மத்திய அரசு உறுதியான, தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.

முதல்வரின் கடிதத்திற்கு, கடந்த, 16ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின், 13ம் திருத்தம் தொடர்பாக, இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய, சாத்தியமான மாற்றங்கள் குறித்த, தங்களுடைய கடிதத்திற்கு நன்றி. இலங்கையில், அரசியல் அதிகாரங்களை ஒருங்கிணைப்பது, தன்னாட்சி உரிமை அளிப்பது தொடர்பான பிரச்னையில், மத்திய அரசின் நிலையில், எந்த மாற்றமும் இல்லை.

இலங்கையில், எல்லா சமுதாயத்தினரும், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள், அங்கு ஒருங்கிணைந்து வாழும் வகையில், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு அளித்து, ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே, நமது நாள்பட்ட கோரிக்கை. இலங்கைத் தமிழர்களுக்கு, இத்தகைய தன்னாட்சி உரிமை அளிக்கும் வரை, நமது பணி தொடரும். இவ்வாறு, பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: