தனுஷ்கோடியில் கடற்படைத் தளம் அமைக்க வேண்டும்:கருணாநிதி

karunanithiதமிழக மீனவர்களைக் காப்பாற்ற தனுஷ்கோடியில் இந்திய கடற்படைத் தளம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு மாநில அரசின் ஆதரவுடன் இலங்கை சென்று திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் தமிழக அரசு அவர்களுக்கு உரிய அனுமதியைத் தரவில்லை என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சுமுகப் பேச்சுவார்த்தைக்குத் தாமதம் செய்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், இதுவரை மத்திய அரசு மீதே பழிசுமத்தி காலம் கடத்தி வந்ததைப் போலச் செய்யாமல், தற்போதாவது தாமதத்தைத் தவிர்த்து, மீனவர் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

இந்திராவின் அணுகுமுறை: பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, தமிழக எல்லைப் பகுதிக்குள்ளேயே வந்து சிங்கள கேப்டன் ஒருவர், தமிழக மீனவர்களைக் கைது செய்து கொண்டிருந்தார்.

இதனால் கோபமடைந்த இந்திரா காந்தி, சிங்கள கேப்டனை கைது செய்ய உத்தரவிட்டார். அந்தக் கேப்டனை கைது செய்து, மண்டபம் சிறையில் வைத்தனர்.அதன் பிறகு கேப்டனையும், இலங்கை வீரர்களையும் மன்னிப்புக் கேட்க வைத்தே அவர்களை இலங்கை அரசு திரும்பப் பெற்றது.

இந்தச் சம்பவத்தை இந்திய அரசும் தமிழக அரசும் நினைவில் கொண்டு, தற்போதும் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு வழிக்கு வரும்.

மேலும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரின் கொடுமைகளில் இருந்து காப்பாற்ற உடனடியாக இந்திய கடற்படைத் தளம் ஒன்றினை தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் அமைக்க வேண்டும்.

மீனவர் பிரச்னைக்கு இது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

TAGS: