உ.பி.யில் மதக் கலவரம்: 21 பேர் சாவு

muzaffarnagar_violence_295உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் நடந்த வகுப்புக் கலவரத்துக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை மத்திய அரசு கோரியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பதற்றம் நீடித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர். இந்த மோதலில், தொலைக்காட்சி ஒன்றின் பகுதிநேர நிருபர் ராஜேஷ் வர்மா, போலீஸ் புகைப்படக்காரர் இஸ்ரார் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இறந்தனர். சிலர் காணாமல் போய்விட்டனர். இதனால் வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கௌஷல் ராஜ் சர்மா கூறுகையில், “”கலவரத்தைத் தொடர்ந்து சிலர் காணாமல் போய்விட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்” என்றார். மாவட்டத்தில் உள்ள போபா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 உடல்களும், சாபார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஓர் உடலும் ஞாயிற்றுக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டன.

கலவரத்தை அடுத்து மாவட்டத்தின் கோத்வாலி, சிவில் லைன்ஸ், நை மண்டி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அதிரடிப்படையின் 5 கம்பெனிகளும், ஆயிரக்கணக்கான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாநில காவல்துறை ஏடிஜி (சட்டம்-ஒழுங்கு) அருண்குமார் கூறியது: முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2 நாள்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு கிராமத்தில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான போலியான ஒரு விடியோ காட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த விடியோ காட்சியை நாங்கள் முடக்கினோம். எனினும், துரதிருஷ்டவசமாக அந்தக் காட்சி அடங்கிய சி.டி.க்கள் அந்தக் கிராமத்தில் புழக்கத்தில் விடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இரு இடங்களில் மதரீதியிலான மோதல்கள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து மக்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். அதன் பின், அரசியல் ரீதியிலான வன்முறையும் வெடித்தது. அங்கு நிலைமை இப்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சனிக்கிழமை இரவுக்குப் பின் எந்த அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறவில்லை.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு கொடி அணிவகுப்புகளை நடத்தியுள்ளனர். கலவரம் தொடர்பாக இதுவரை 52 பேரைக் கைது செய்துள்ளோம். நிலைமை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று நம்புகிறோம். நிலைமையை மென்மையாகக் கையாளுமாறு மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறை எஸ்.பி.க்கும் சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம் என்றார் அருண்குமார்.

முதல்வர் எச்சரிக்கை

இந்தக் கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கலவரத்தில் உயரிழந்த தொலைக்காட்சி நிருபரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடும், இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த வன்முறை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில், “”மாநிலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பராமரிப்பதில் சமாஜவாதி அரசு முழுமையாகத் தோல்வியடைந்து விட்டதையே இந்தக் கலவரம் காட்டுகிறது. முசாஃபர்நகரில் வன்முறை வெடிப்பது இது முதல் முறை அல்ல. உள்துறை அமைச்சகத்தின் கூற்றின்படி இப்போதைய சம்பவத்துக்கு முன் 34-35 முறை மதமோதல்கள் ஏற்பட்டுள்ளன. மதப் பதற்ற சூழலில் தேர்தலை நடத்தி, தங்கள் வாக்குவங்கியை வலுப்படுத்த ஆளுங்கட்சி முயற்சிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

அறிக்கை கோரிய மத்திய அரசு

முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசிடம் கோரியுள்ளது. கலவரங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச அரசுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி மாவட்டமான முசாஃபர்நகரில் வன்முறையை ஒடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு மத மோதல்கள் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு, மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால், பிரச்னை ஏற்படுத்தக் கூடியவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தல், அவர்களை வீட்டுக்காவலில் வைப்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TAGS: