கல்வி அமைச்சர் திட்டமிட்டே தவறான பதிலைத் தருகிறாரா?

ஜீவி காத்தையா, அக்டோபர் 15, 2014.

 

muhபாலர்பள்ளி வகுப்புகள் அமைப்பதற்காக 2014 ஆண்டு பட்ஜெட்டில் மொத்தம் ரிம58 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒதுக்கீட்டின் கீழ் பாலர்பள்ளி வகுப்புகள் இல்லாத 351 தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் எழுத்து வாயிலாக கேட்டிருந்த கேள்விக்கு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் எழுத்து மூலமாக பதில் அளிக்கப்பட்டது.

 

முட்டாளாக்கும் நோக்கமா?

 

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் அல்ல. அப்பதில் தம்மையும் மக்களையும் அரசாங்கம் முட்டாள்களாக்கப் பார்க்கிறது என்று குலசேகரன் கூறியுள்ளார்.

 

குலசேகரன் கேட்டிருந்த கேள்வி இதுதான்: “2013ல் அறிவிக்கப்பட்ட 2014 ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாலர்பள்ளிகளுக்காக மொத்தம் 58கோடி ஒதுக்கப்பட்டது. அதில் தேசிய, சீன தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும். அந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்ப்பள்ளிகளில், அதாவது எஞ்சியுள்ள 351 தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் அமைக்கப்பட்டன?”

 

இக்கேள்வி கணித மேதை இராமானுஜம் போன்றவர்தான் பதில் அளிக்க முடியும் என்ற அளவிற்கு ஒரு சிக்கலானது அல்ல.

 

அவ்வளவு சுலபமான கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மக்களிடம், மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகளிடம் எது வேண்டுமானாலும் கூறலாம் என்ற போக்கை அரசு தரப்பின் பதில் பிரதிபலிக்கிறது.

 

கல்வி அமைச்சு அளித்த பதில்: “மொத்த பாலர்பள்ளி வகுப்புகள் 8,898. அதில் தேசியப்பள்ளிகளில் 8,120 வகுப்புக்கள். சீனப்பள்ளிகளில் 556 வகுப்புக்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் 222 வகுப்புக்கள். மேலும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாலர்பள்ளிகளில் படிக்க இயலாதவர்கள் கெம்மாஸ், பெர்பாடுவான் நடத்தும் பாலர் பள்ளிகளில் சேர்ந்து பயிலலாம்.”

 

இப்பதில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஒரே ஆண்டில் 222 பாலர்பள்ளி வகுப்புகள் தமிழ்ப்பள்ளிகளில் அமைக்கப்பட்டனவா? 2014 ஆம் ஆண்டில் எத்தனை பாலர்பள்ளி வகுப்புகள் தமிழ்ப்பள்ளிகளில் அமைக்கப்பட்டன என்பதுதான் கேள்வி.

 

இது முதல் தடவை அல்ல

 

கல்வி அமைச்சின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ள “222 தமிழ்ப் பாலர்பள்ளி வகுப்புகள் புதியவை அல்ல. 222 தமிழ்ப் பாலர் வகுப்புக்கள்kula எற்கனவே உள்ளவை. இவ்வகுப்புக்கள் யாவும் 172 தமிழ்ப்பள்ளிகளில் உள்ளன. சில பள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள 351  தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளி வகுப்புகள் இல்லை”, என்று குலசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.

 

இவ்வாறு அரசாங்கத்திடமிருந்து “ஏனோதானோவென்ற” பதிலை குலசேகரன் பெற்றிருப்பது இது முதல் தடவை அல்ல.

 

ஆறாவது மலேசிய ஐந்தாண்டு திட்டத்திலிருந்து 9 ஆவது ஐந்தாண்டு திட்டங்கள் வரையில் மலேசிய பள்ளிகளுக்கு ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றின் விபரம்:

Plan National school Chinese school Tamil school Total %
6th 1991-1995 89.72% 8.14% 2.14% 100%
7th 1996-2000 96.54% 2.44% 1.02% 100%
8th 2001-2005 96.10% 2.73% 1.17% 100%
9th 2006-2010 95.06% 3.60% 1.34% 100%

 

 

மேற்கூறப்பட்ட அடிப்படையில் 9 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30, ஒரு சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 மற்றும் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95 ஒதுக்கப்பட்டள்ள விபரத்தை கீழே காண்போம்:

All primary schools National primary schools % of total Chinese primary schools % of total Tamil primary schools % of total
Total no. students 3,044,977 2,300,729 75.6 645,669 21.2 98,579 3.2
9MP Development-Million 4,837.3 4,598.2 95.1 174.33 6 64.8 1.3
RM per student for 5 years 1,589 1,998 270 659
RM per student per month 26.48 33.30 4.50 10.95

 

மலேசிய குடிமக்களாகிய தேசிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் அரசாங்கம் பின்பற்றி வரும் வேற்றுமை பேணும் கொள்கையை இதில் தெள்ளத்தெளிவாக காணலாம்.

 

6 லிருந்து 9 வரையிலான ஐந்தாண்டு திட்டங்களில் அரசாங்கத்தின் வேற்றுமை பேணும் கொள்கை அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய புள்ளிவிபரங்கள் கிடைத்தன. அவற்றின் அடிப்படையின் அரசாங்கத்தின் இனவாதப் போக்கு கடுமையான விமர்சிக்கப்பட்டது.

 

மலேசிய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மலேசியர்கள். இந்நாட்டிற்காக உயிர் துறப்பதற்கான சட்டப்பூர்வமான கடப்பாடுகள் கொண்டவர்கள். ஆனால், அவர்களின் கல்வி உரிமையில் ஏன் வேறுபாடு என்ற கேள்வி பலரால் எழுப்பப்பட்டது.

 

தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30. தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95. சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50! ஏன், ஏன், ஏன் இந்த வேறுபாடு? என்ற கேள்வி எழுந்தது.

 

அடுத்து வந்தது 10 ஆவது மலேசிய திட்டம். அதில் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி மேற்கூறப்பட்ட அடிப்படையில் எந்தத் தகவலும் இன்று வரையில் கிடைக்கவில்லை.

 

இத்தகவலைப் பெறுவதற்காக டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் 17.10. 2011இல் கல்வி அமைச்சரிடம் கீழ்க்கண்ட கேள்வியை தாக்கல் செய்தார்:

 

“YB Tuan Kulassegaran A/l Murugesan (Ipoh Barat) minta MENTERI PELAJARAN menyatakan amaun wang yang dijangka dan telah dibelanjakan  untuk setiap murid setiap bulan untuk sekolah Kebangsaan Cina dan Tamil di bawah rancangan Malaysia ke-9 dan ke-10. Sila nyatakan rasional perbezaan  perplanjaan ini.”

.

 

அக்கேள்விக்கான கீழ்க்கண்ட பதில் டிசம்பர் 2011 இல் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்மான அளிக்கப்பட்டது:

 

 

Kategori Sekolah RMKe – 9 (RM) RMKe – 10 (RM)
SJK ( C ) 6,457,080,807 1,716,393,676
SJK ( T ) 2,481,674,380    584,382,340

 

 

கேள்வி என்ன? பதில் என்ன? இவ்வாறான பதிலை ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அளிக்கும் நெஞ்சுரம் கல்வி அமைச்சருக்கு அன்று இருந்தது போல் இன்றும் இருக்கிறது.

 

ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு என்பது கேள்வி. பதிலைப் பாருங்கள்.

 

மேலும், தேசியப்பள்ளிக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

 

அன்று, கல்வி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு தவறான பதிலை அளித்திருந்ததற்கு எதிராக மக்கள் சீறி எழவில்லை. இனிமேலும் எழ மாட்டார்கள் என்ற நெஞ்சுரம் அமைச்சருக்கு வலுப்பட்டிருப்பதால் இம்முறையும் அதே போன்ற தவறான பதிலை அதே குலசேகரனுக்கு அளித்துள்ளார்.

 

மக்கள் கருத்து என்னவோ?