இராகவன் கருப்பையா – நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் அறிவிக்கப்படலாம் எதும் யூகங்கள் வலுத்துவரும் இவ்வேளையில் அம்னோவைச் சேர்ந்த சில பேர் தங்களை ‘ஹீரோ’க்களாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றனர்.
உள்நாட்டு அரசியல் நிலவரம் கடந்த சில வாரங்களாக மிகவும் பரபரப்பான சூழலை நோக்கி சூடேறிக் கொண்டிருப்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.
இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில அரசியல்வாதிகள், தங்களுடைய இனத்திற்கும் மதத்திற்கும் இவர்கள்தான் காவலர்கள் எனும் தோற்றத்தை மக்கள் மத்தியில் விதைக்கின்றனர்.
தங்களுடைய ‘டிராமா’வுக்கு வலு சேர்ப்பதற்கு, அரசர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களையும் அவர்கள் இழுத்து சேர்த்துக் கொள்வது சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது.
இந்தத் திடீர் ‘ஹீரோ’க்களில் முன்னணி வகிப்பவர் முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின்தான். அவருடைய செய்கைதான் நமக்கெள்ளாம் உண்மையிலேயே வியப்பளிக்கிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட அவர் பொதுவானக் கருத்துகளை நடுநிலையாக வெளிப்படுத்தி வந்தார்.
வெகு விரைவில் நாட்டின் பிரதமராகக் கூடிய ஆற்றலையும் அரசியல் முதிர்ச்சியையும் கொண்டவர் என பரவலாகக் கருதப்படும் அவரை அம்னோ கடந்த மாதம் மீண்டும் சேர்த்துக் கொண்டது.
கடந்த 2024ஆம் ஆண்டில் எழுந்த கே.கே.மார்ட்(KK Mart) காலுறை விவகாரத்தில் அக்கட்சியின் இளைஞர் தலைவர் அக்மால் வெளிக்காட்டிய விடாப்பிடியான முரட்டுத்தனமானப் போக்கை கூட கைரி அந்த சமயத்தில் கண்டித்தார்.
ஆனால் கடந்த வாரம் திடீரென பல்டியடித்த அவர், “அக்மாலின் போக்கு சில சமயங்களில் அம்னோவுக்குத் தேவை,” என ஒரு அறிவிப்பை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
காற்றடிக்கும் பக்கம் சாயும் நாணலைப் போலான கைரியின் போக்குக் குறித்து முன்னாள் நிதியமைச்சரான ஜ.செ.க.வின் லிம் குவான் எங் கருத்துரைத்த போது மேலும் இரு திடீர் ‘ஹீரோ’க்கள் தோன்றினார்கள்.
“உங்களை முதலில் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்சியும் அப்படிதான்,” என லிம்மை சாடினார் அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் நுர் ஜஸ்லான்.
அக்கட்சியின் மற்றொரு உச்சமன்ற உறுப்பினரான ஜஸ்லான் ராஃபியும் இவ்விவகாரத்தில் மூக்கை நுழைத்து தன்னை ஒரு ‘ஹீரோ’வாக அடையாளப்படுத்திக் கொள்ள முற்பட்டார்.
“நாடு முன்னோக்கிச் சென்றுள்ள இவ்வேளையில் லிம் மட்டும் பழங்கால இன அரசியலில் சிக்கிக் கிடக்கின்றார்,” என அவர் குறிப்பிட்டது நமக்கு சிரிப்பைதான் ஏற்படுத்துகிறது. இந்நாட்டில் இன அரசியலுக்கு எந்தக் கட்சி உரமிடுகிறது என்று நமக்குத் தெரியாதா என்ன?
இவர்களெல்லாம் இவ்வளவு நாள்களாக எங்கிருந்தார்கள் என நாம் குழம்பிக் கொண்டிருந்த வேளையில்தான் மற்றொரு ‘ஹீரோ’வான அஸிராஃப் வாஜ்டி களத்தில் குதித்தார்.
அம்னோவின் தலைமைச் செயலாளரான இவர் பெரும்பாலான சமயங்களில் அமைதியாகத்தான் இருப்பார். ஆனால், “நானும் பேசினேன்,” என்பதற்காக மற்றொரு ஜ.செ.க. தலைவரான தோனி புவாவை இவர் சாடினார்.
“மரியாதைத் தெரியாத, திமிர் பிடித்தத் தோனி, சிலாங்கூர் சுல்தானை அவமதித்துவிட்டார்,” என மற்றொரு விவகாரத்தை சுட்டிக் காட்டி அஸிராஃப் சாடினார்.
தேர்தலில் அணி சேராமல் தனித்தே போட்டியிடவிருப்பதாக அம்னோ அறிவித்துள்ள வேளையில், அடுத்தடுத்து இன்னும் அதிகமான ‘ஹீரோ’க்கள் திடீர் திடீரென முளைத்து குட்டையை குழப்பிக் கொண்டிருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
மக்கள் மத்தியில் தங்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் காட்டிக் கொண்டு அவர்களுடைய அபிமானத்தை பெறுவது மட்டுமின்றி தொகுதிகளுக்காக முண்டியடிக்கும் தேரமல்லவா இது!























